Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

ஆசீவகமும் ஐயனார் வரலாறும் - மதிப்புரை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
மதிப்புரை

“ஆசீவகமும் ஐயனார் வரலாறும்”என்ற தலைப்பிலமைந்த தம் நூலிற்கு மதிப்புரை ஒன்றை வழங்க இயலுமா? எனப் பேராசிரியர் க.நெடுஞ்செழியன் அவர்கள் அலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டார். பேராசிரியர் மீதும் அவர்களின் ஆய்வுகள் மீதும் நான் வைத்திருந்த மதிப்பின் காரணமாக மதிப்புரை வழங்குவதற்கு உடன் இசைந்தேன். இந்தியத் தத்துவவியலிலோ, தர்க்கவியலிலோ தமிழ் இலக்கியத்திலோ அல்லது குறிப்பாகத் தமிழர் சமயமாக விளங்கிய ஆசிவகம் குறித்தோ அதிகம் புலமை இல்லாத எனக்கு அதனை அறிவதற்கான வாய்ப்பை அளித்த பேராசிரியர் அவர்களுக்கும் அவர்தம் துணைவியார் அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

பேராசிரியர் க. நெடுஞ்செழியன் எழுதியுள்ள “ஆசிவகமும் ஐயனார் வரலாறும்”என்ற தலைப்பில் அமைந்துள்ள இந்நூலிற்கு நான் மதிப்புரை எழுதுவதற்குத் தகுதி உடையவன் தானா? என்ற கேள்வி என்னுள் எழுந்தது. ஆயினும் பேராசிரியர் அவர்கள் என்மீது வைத்துள்ள நீங்கா அன்பின் காரணமாகவும் நானும் அன்னைத் தமிழுக்கு ஏதோ கடுகளவு கடமையாற்றியிருக்கின்றேன் என்று அவர் நினைத்துக் கொண்டிருப்பதின் பயனாகவும் இந்நூலிற்கு மதிப்புரை வழங்க முன்வந்தேன். பள்ளியில் படிக்கின்ற காலங்களில் நான் தேடி விரும்பிப் படிக்கும் "அம்புலிமாமா” கதை இதழ்களில் நீங்காது இடம்பெறும் விக்கிரமாதித்தன் கதையின் கதாநாயகன் விக்கிரமாதித்த இராஜன் போல் பேராசிரியர் க.நெடுஞ்செழியன் அவர்கள் என் மனதிலும் எப்படியோ நீங்கா இடம்பிடித்து விட்டார்.

விக்கிரமாதித்தன் கதைகளின் தொடக்கத்தில் ஒரு தொடர் கண்டிப்பாக இடம்பெறும். "தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் மரத்தின் மீதேறி அம்மரத்தில் இருந்த வேதாளத்தைத் தனது தோளில் இருத்திக் கீழே கொண்டுவந்தபொழுது அவரைப் பார்த்து வேதாளம் சிரித்தபடி கேள்வி கேட்கத் தொடங்கியது" என்ற இவ்வரிகள் பேராசிரியர் அவர்களின் ஆய்வுத் திறனை நினைக்கும் பொழுது என் மனதில் தோன்றும். இந்திய வரலாற்றில் நீங்கா இடம்பெற்ற மரபு சார்ந்த விக்கிரமாதித்த அரசன் போன்று பேராசிரியர் அவர்களும் தமிழர்கள் மறந்த தமிழர் சமயமான ஆசீவகத்தைத் தமது விடாமுயற்சியால் தூக்கி நிறுத்த அரும்பாடுபட்டுக் கொண்டிருப்பதை நானும் அறிவேன்; தமிழுலகமும் நன்கறியும்.

பேராசிரியர் இந்நூல் எழுதுவதற்கு முன்னைத் தரவுகள் மட்டுமன்றிப் பல நூல்களைத் தேடித் தெளிந்து உரிய இடத்தில் அவற்றைத் தரவுகளாகப் பயன்படுத்தியுள்ளமையை பக்கங்கள் தோறும் அறிய முடியும். இலக்கியத் தரவுகள் மட்டுமன்றி தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், களஆய்வுகள் அவற்றின் மூலம் பெறப்பட்ட நேரிடைச் சான்றுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. இந்நூலிற்கான தரவுகளைத் தேடித் தமிழகம் மட்டுமன்றி ஆசீவகத்துடன் தொடர்புடைய வட இந்திய நகரங்கள் பலவற்றிற்கும் பேராசிரியர் அவர்களும் அவர்தம் துணைவியாரும் நேரில் சென்று கள ஆய்வுகள் மேற்கொண்டதை நான் நன்கறிவேன். தமிழகத்தில் சில இடங்களுக்குப் பேராசிரியர் அவர்களுடன் நானும் சென்றுள்ளவன் என்ற அடிப்படையில் இந்நூலிற்கான ஆய்வே நீண்ட நெடியதொரு வரலாற்றைக் கொண்டுள்ளது என்பதை நான் அறிவேன். ஆய்வுகள் எவ்வாறு அமையவேண்டும் என்பதற்கான எடுத்துக்காட்டாக இந்நூல் அமைந்துள்ளது எனில் வியப்பில்லை.

ஆசீவகம் பற்றித் தமிழர்கள் ஓரளவிற்கே முன்பு அறிந்திருந்தனர். ஆசீவகம் பற்றிய ஆய்வுகளை இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் மிகச் சில ஆய்வாளர்களே இதுவரை செய்துள்ளனர். அவையும் முழுமையற்ற ஆய்வுகளாகவே வந்துள்ளன. தமிழகத்தில் ஆசீவகம் குறித்துப் பேராசிரியர் தி.வி. மகாலிங்கம் போன்றோர் கோடிட்டுக் காட்டியுள்ளனரே தவிர நீண்ட ஆய்வாக அது அமையவில்லை. உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் திருமதி விஜயலட்சுமி அவர்களால் எழுதப்பட்ட ஆசீவகம் குறித்த நூலும் முற்றிலும் இலக்கியச் சான்றுகளின் அடிப்படையில் எழுதப்பட்ட நூலாகவே அமைந்தது. இதற்கு மாறாக அனைத்துத் தரவுகளையும் ஒன்றிணைத்துப் பேராசிரியர் க.நெடுஞ்செழியன் இந்நூலை எழுதியுள்ளார். தமிழர்களுக்கு இது புதிய வரவாக அமைந்துள்ளது. ஆசீவகம் குறித்து மேலும் ஆய்வுகள் செய்வதற்கும் இந்நூல் ஒரு தூண்டுகோலாக அமையும்.

ஆசீவகம் தமிழகத்தில்தான் தோன்றியது என ஆணித்தரமாகத் தக்க சான்றுகளைக் கொண்டு நிறுவியுள்ளமையை இந்நூலினைப் படிப்போர் நன்கறிய இயலும். தொடக்கத்தில் பேராசிரியர் அவர்கள் எழுதிய நூலிற்கு சில மறுப்புகளும் இருந்தன. குறிப்பாக எனது நண்பர் முனைவர் சாந்தலிங்கம் அவர்கள் எழுதிய மறுப்புக் கட்டுரையைக் கூறலாம். அக்கட்டுரையை அவர் வரவேற்றதுடன் அக்கட்டுரை வெளிவந்த அதே இதழில் அதனை மறுத்துப் பேராசிரியரும் ஒரு கட்டுரையை வெளியிட்டார். தமது கருத்தினை மறுத்து கட்டுரை எழுதியவர்களையும் தாம் நடத்திய கருத்தரங்களில் பேச அழைத்து வாய்ப்பளித்தவர் பேராசிரியர் அவர்கள். எனவே ஆய்வுகளில் பிற ஆய்வாளர்களின் கருத்துக்களையும் முற்றிலும் புறக்கணிக்காமல் அவற்றுள் கொள்வன கொண்டு தள்ளுவன தள்ளி மேலும் தம் கருத்திற்கு வலு சேர்க்கின்ற வகையில் இந்நூலினைப் படைத்துள்ளார்.

தமிழகத்தில் தோன்றிய ஆசீவகம் எவ்வாறு வட இந்தியா சென்றது. தற்பொழுது எவ்வாறு அய்யனார் வழிபாடாக அது இன்றும் தொடர்கிறது, அகத்தியருக்கும் தமிழருக்கும் உள்ள தொடர்பு, அகத்தியர் தமிழர்கள் பார்வையில் எவ்வாறு இடம் பெற்றுள்ளார், வட இந்திய குறிப்பாக வேதங்களில் எவ்வாறெல்லாம் அவர் சுட்டப்பெறுகிறார் என்ற ஒப்புமைகள் நூலிற்கு அணி சேர்க்கின்றன. தொல்லியல், கல்வெட்டியல் அடிப்படையில் ஆசீவகம் - அய்யனார் பற்றிய ஆய்வுகள் அமைந்துள்ளமையும் சிறப்புக்குரியன.

தமிழகத்தில் தமிழி எழுத்துப் பொறிப்புகள் சைனர்களால் தான் உருவாக்கப் பட்டன என்ற கருத்தினைப் பல ஆய்வாளர்கள் கூறிவந்தபொழுது அவை சைனர்களால் உருவாக்கப்பட்டவை அல்ல; தமிழர்களால் படைக்கப்பட்டவை என நான் பல்வேறு ஆய்வுகளில் குறிப்பிட்டிருந்தேன். சைனத்திற்கான எவ்வித சான்றுகளும் இல்லாத நிலையில் அவை சைனக் கல்வெட்டுகள் எனக் குறிக்கப் பட்டன. சைன சமயம் சார்ந்த குறியீடுகளோ அல்லது அச்சமயத்திற்கான செய்திகளோ எங்கும் அக்கல்வெட்டுகளில் குறிக்கப்படவில்லை. அவ்வாறு இருக்கையில் அவை சைன சமயம் சார்ந்தவை என்பதை எவ்வாறு உறுதிபடக் கூற இயலும்? தமிழகத்தில் சைனம் ஏறக்குறைய கி.பி.3 அல்லது 4ஆம் நூற்றாண்டு அளவில் தான் வட தமிழகத்திற்கு வந்து பின்பே தென் தமிழகத்திற்குப் பரவியிருத்தல் வேண்டும்.

இன்றும் காஞ்சிபுரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் சைன சமயத்தைச் சார்ந்தவர்கள் வேலூர் திருவண்ணாமலை மாவட்டங்களில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களே பூர்வீகத்தில் சைன சமயத்தைச் சார்ந்திருந்த தமிழகச் சைனர்கள். இங்கிருந்தே சைனம் பிற பகுதிகளுக்குச் சென்றது. அப்பொழுதுதான் சைனச் சமயத்தின் சங்கங்கள் பல எழுச்சியுற்றன. தமிழி கண்டுபிடிக்கப்பட்ட பகுதிகளில் அக்குகைத் தளங்களைச் சைன முனிவர்கள் தங்கும் இடங்களாகவும் துறவறம் மேற்கொண்ட இடங்களாகவும் சைனப் பள்ளிகளாகவும் மாற்றி அங்கு புடைப்புகளாகச் சைனக் கடவுளர்களைச் செதுக்கி வட்டெழுத்து மற்றும் தமிழ்க் கல்வெட்டுக்களையும் வெட்டிவித்து கொண்டனர். இதனை அடிப்படையாகக் கொண்டு அதற்கும் முன்பிருந்த தமிழிக் கல்வெட்டுகளையும் குகைகளையும் சைனர்கள் வாழ்ந்த இடங்கள் எனக் கூறுவது தவறாகும். மதுரைப் பகுதியில் தழைத்தோங்கி இருந்ததாகச் சொல்லப்படும் சைன மதத்தைச் சார்ந்தவர்கள் தற்பொழுது ஓரளவிற்காவாவது அப்பகுதிகளில் வட தமிழகத்தில் வாழ்வதுபோல் அங்கும் வாழ்ந்து வரவேண்டுமல்லவா? இவற்றையெல்லாம் ஆய்வாளர்கள் கவனத்தில் கொண்டு ஆய்வு செய்தல் வேண்டும். தமிழிக் குகைகள் சைனத்தைச் சாராத ஆசீவகத்திற்குரியது என அக்கல்வெட்டுகளின் அடிப்படையிலேயே பேராசிரியர் அவர்கள் உறுதி செய்துள்ளார்.

பல சான்றாதாரங்களை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்ட நூல் இதுவாகும். தமிழர்களின் வரலாற்றை அறிவதற்கும் சமய சமூகப் பண்பாட்டை அறிவதற்கும் இந்நூல் வழிவகுக்கும்.

அன்பன்,

சு. இராசவேலு

தலைவர் கடல்சார் வரலாறு

மற்றும் கடல்சார் தொல்லியல் துறை

தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர் - 613 010.

Previous article திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார் - ஆசிரியர் குறிப்பு