திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் - பதிப்புரை
"பல்லுயிரும் பலவுலகும்
படைத்தளித்துத் துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள் முன்
இருந்தபடி இருப்பதுபோல் கன்னடமுங் களிதெலுங்கும்
கவின்மலை யாளமும் துளுவும் உன்உதரத்து உதித்தெழுந்தே
ஒன்றுபல ஆயிடினும் ஆரியம் போல் உலகவழக்கு
அழிந்தொழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம் வியந்து
செயல் மறந்து வாழ்த்துதுமே!"
எனப் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள் மனோன்மணியத்தில் பாடியுள்ளார்.
உலக முதன்மொழியும் - தென்னக - இந்திய - உலக மொழிக்கெல்லாந் தாய்மொழியாக விளங்கும் தமிழ்மொழியது - பெருமையும் - வளமையும் - தொன்மையும் - உயர்தனிச் செம்மொழித் தன்மையினையும் தமிழரே அறிந்துகொள்ளாத நிலையில் - வெளிநாட்டிலிருந்து - அவர்தம் மதத்தினை நம் நாட்டினர்க்குப் பரப்ப வந்த மதப் பரப்புநர் நமது தாய் மொழியாகிய தமிழ்மொழியினைக் கற்றுக்கொண்டு - அதன் வாயிலாகத் தமது மதப் பரவலைச் செய்யக் கருதிய அயல் நாட்டினர் - தமிழ் மொழியைக் கற்றுக்கொண்டனர். அந்தத் தமிழ் அவரைத் தன்பால் ஈர்த்து அரவணைத்துக் கொண்டது.
பணியாற்ற வந்த எல்லீசரையும் மதம் பரப்ப வந்த வீரமாமுனிவரையும் ஜி.யூ. போப்புவையும் - தமது வயிற்றிற் பிறக்காத பிள்ளைகளாக ஏற்று அரவணைத்துக் கொண்ட தமிழ்த்தாய் - கால்டுவெல்லாரையும் ஈர்த்து அரவணைத்துக் கொண்டாள்.
தமிழ் இன்பக் கடலில் மூழ்கித் திளைத்த கால்டுவெல் முத்தும் எடுக்க முனைந்தார். அதன் பயனே - "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்" என்னும் இந்த அரிய நூல். கால்டுவெல் திருநெல்வேலிச் சரித்திரம், தாமரைத் தடாகம், ஞானஸ்நாநம், நற்கருணை முதலிய நூல்களையும் எழுதி யுள்ளார். திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் இந்த ஒரு நூலே அவரை இந்த உலகில் பெரும்புகழுடன் வாழ வைத்துக் கொண்டிருக்கும் என்பதில் எள்ளளவேனும் அய்யமில்லை.
கால்டுவெல் ஆங்கிலத்தில் இயற்றி - 1856 - இல் வெளி வந்துவிட்டது. 1913இல் அறிஞர் மாகறல் கார்த்தி கேயனார் ஒரு மொழி நூலினை வெளியிட்டார். அது தமிழ்மொழியின் சிறப்பினை வெளிப்படுத்துவது எனினும் ஒப்பீட்டு முறையினில் அமைந்ததில்லை.
ஆங்கிலத்தில் வெளிவந்த "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் தான் முதன் முதலாகத் தமிழ்மொழியிலிருந்து தான் - கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளு முதலிய மொழிகளும் தோன்றின என்ற அரிய செய்தியினை அறிந்து மகிழ்ச்சிக் கூத்தாடினர் தமிழர்.
இந்த ஆங்கில நூலினைத் தமிழ்மொழியில் பெயர்த்தால் சிறப்பாக இருக்கும் - செம்மொழியின் பெருமையைத் தமிழரும் பிறரும் அறிந்து கொள்வர் என்று சிந்தித்த புலவர் கோவிந்தனார் தூய தமிழ் மொழியில் முழுமையாக மொழி பெயர்த்தார். மற்ற பதிப்பக வெளியீடுகளில் இரண்டாம் பாகம் ஒலி, வேர்ச்சொல் இரத்தினம் அவர்களின் மொழிபெயர்ப்புச் சேர்க்கப் பட்டிருக்கிறது. புலவர். கா. கோவிந்தனார் சைவசிந்தாந்த நூற் பிரதி கிடைக்கப் பெற்றமையால், அதனை இதனுடன் இணைத்து வெளியிட்டுள்ளோம். புலவர் கா. கோவிந்தனாரது நூல்கள் நாட்டுடைமை ஆக்கிய பிறகு அவரது நூல்களை எமது பதிப்பகத்தின் வாயிலாக வெளியிட்டுவருகிறோம். அவ்வாறே இந்த மொழிபெயர்ப்பு நூலினையும் எங்களது பதிப்பகத்தின் வாயிலாக வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.
மொழியாராய்ச்சியாளரும் மொழி வல்லுநரும் மொழியார்வலரும் தமிழ்மொழியின் சிறப்புகளை அறிந்து கொள்ளுதல் வேண்டும் என்று விரும்புகின்ற ஒவ்வொரு தமிழனும் இந்த நூலினை வாங்கிப் பயன்பெறுதல் வேண்டும் என்ற பேரவாவின் விளைவால் இந்த நூலினைச் சிறந்த முறையினில் தரமான நிலையினில் - குறைவான விலையினில் பதிப்பித்து வெளியிட்டிருக்கின்றோம்.
இந்த நூலினைப் பெற்று ஒவ்வொருவரும் பயன் பெறுதல் வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றோம்.
- பதிப்பகத்தார்