விடுதலைப் போரில் தமிழ் நாடகங்கள்
விடுதலைப் போரில் தமிழ் நாடகங்கள்
நாடகம்’ எனப்படுகிற உணர்வு நிலை சார்ந்த படைப்பு வடிமானது மனித மனங்களை மட்டுமன்றி, வாழ்வியல் சார்ந்த கட்டமைப்புகளையும்கூட அசைத்துப் பார்க்கும் வல்லமை கொண்டதாகும். குறிப்பாகத் தமிழ் நாடகம் இயல், இசை, நாடகம் எனப்படுகிற முக்கூட்டின் இணைவில் மெய்ப்பாட்டுக் கூறுகளுடன் வெளிப்பட்டு இயங்கு தளத்தில் வில்லினின்று புறப்படும் அம்புகளாய், சொற்களைச் சுவையோடும், காட்சியாக்கத்தோடும் கண்களுக்கும், மனதிற்கும் விருந்தும் மருந்துமாய் விளம்புதல் செய்யும் நிலையை தொன்மை இலக்கியங்களினூடாகவே அறிந்து வந்துள்ளோம்.
பொதுவாகவே நாடகக் கலையானது அறிவுப் புரட்சிக்கும், அறிவியல் புரட்சிக்கும் அழுத்தமான இயங்கு வடிவம் என்பதை உலகளாவிய நிலையிலான வரலாற்று நிகழ்வுகள் அறியத் தருகின்றன. குறிப்பாக அடிமை கொண்டோரின் உள்மனத்துள் கனலாய் கருக்கொண்டிருக்கும் விடுதலைத் தீயினை கொளுந்துவிடச் செய்யும் வண்ணம் உடனடி செயன்மையை அல்லது காரணியை உருவாக்கும் வல்லமை நாடகக் கலைக்கு உண்டு. அவ்வகையில் இயக்கங்களையும் இயக்கும் வல்லமையைக் கொண்டமைந்த நாடகக் கலை இந்திய விடுதலை இயக்கத்திற்காக மேடையில் ஏற்படுத்திய புரட்சி வியப்பிற்குரியது.