இராபர்ட் கால்டுவெல் வரலாறு
இராபர்ட் கால்டுவெல் வரலாறு
மேல் நாட்டு நாகரிகம் தமிழ் நாட்டிற் பரவத் தொடங்கிய காலந்தொட்டு அந்நாட்டுச் சமயங்களைத் தமிழகத்திற் பரப்பக் கருதிய ஐரோப்பிய ஆர்வலர் பலர் தமிழ்மொழி பயிலத் தலைப்பட்டார். தெள்ளிய தமிழ் நூல்களின் சுவை அறிந்து திளைத்தார் சிலர். தமிழிலமைந்த அற நூல்களின் திறங்கண்டு வியந்து அவற்றை ஐரோப்பிய மொழிகளிற் பெயர்த்தமைத்தார் சிலர். மேலைநாட்டு மொழிநூல் முறைகளைத் துணைக்கொண்டு தமிழ்மொழியை ஆராய்ந்தார் சிலர். இம் முத்திறத்தாரும் தமிழ் மொழிக்குத் தகை சான்ற தொண்டு புரிந்துள்ளார்.
மொழி நூற் புலமை வாய்ந்த கால்டுவெல் ஐயர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழகத்திற் சமயத்தொண்டு புரியப் போந்தார். அத் தொண்டு சிறக்கும் வண்ணம் ஐயர் தமிழ் மொழி பயின்றபோது அம் மொழியின் நீர்மை அவர் உள்ளத்தைக் கவர்ந்தது; தென் மொழியாய தமிழொடு தென்னிந்தியாவில் வழங்கும் பிற மொழிகளை ஒத்து நோக்கித் 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்னும் உயரிய நூலை ஆங்கிலத்தில் இயற்றினார். அந்நூல் திராவிட மொழிகளுக்குப் புத்துயிர் அளித்ததென்று கூறுதல் மிகையாகாது.