பெரியார் கருவூலம்
கடவுள் மத உணர்ச்சி கற்பிக்கப்படுவதும் ஏழைகள் தாங்கள் படும் கஷ்டங்களுக்குக் காரணம் முதலாளிகளின் சூழ்ச்சியும், சோம்பேறிகளின் தத்துவங்களும் என்பதை உணராமல் இருப்பதற்காகவேயொழிய, வேறில்லை.
உதாரணம் வேண்டுமானால் இன்றைய தினம் கஷ்டப்படுவதாகவும், இழிவுபடுத்தப்பட்டதாகவும், பட்டினி கிடந்து துன்பப்படுவதாகவும் காணப்படும் மக்களில் அநேகரை அணுகி அவர்களது இவ்வித கஷ்ட நிலைக்குக் காரணம் என்ன என்று கேட்டுப் பாருங்கள். உடனே அவர்கள் சற்றும் தயக்கமின்றி தங்களின் கஷ்ட நிலைக்குத் தங்கள் ‘தலைவிதி’ என்றும், ‘முன்ஜென்மக் கர்மபலன்’ என்றும், ‘கடவுள் சித்தம்’ என்றும், ‘ஆண்டவன் கட்டளை’ என்றும் தான் பதில் சொல்லுவார்களே யொழிய, பிற மனிதர்களால் – அரசாங்க சட்டத்தால் – செல்வவான்களின் சூழ்ச்சியால் – சோம்பேறிகளின் தந்திரத்தால், தாங்கள் ஏமாற்றப்பட்டு, அடிமைப்படுத்தப்பட்டு அவதிப்படுவதாக ஒருநாளும் சொல்லமாட்டார்கள்.
– தந்தை பெரியார்