பெண் ஏன் அடிமையானாள்? (பாரதி புத்தகாலயம்)
பெண் ஏன் அடிமையானாள்? (பாரதி புத்தகாலயம்)
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
இந்நூல்:
உலக ஜனத் தொகையில் ஒரு பாதியாய் மக்களின் தோற்றத்திற்கு நிலைக்களனாய் விளங்கும் பெண்ணுலகு கற்பு, காதல், விபச்சாரம், கைம்மை, சொத்துரிமை இன்மை முதலிய கட்டுப்பாட்டு விலங்குகளால் தளையப்பட்டுள்ளதை சுட்டுகிறது.
மூடநம்பிக்கையால் அல்லற்பட்டு வரும் பெண்களின் விடுதலைக்கும் வருங்கால மக்களின் பகுத்தறிவு வளர்ச்சிக்கும், சுயமரியாதைக்கும் தடையாயிருக்கும் கட்டுப்பாடு என்னும் விலங்கொடித்து கர்ப்பத்தடை, சொத்துரிமை முதலியவைகளைப் பெற்று பெண்கள் சுதந்திரம் பெற வழிவகுக்கிறது.
நன்றி:https://www.amazon.in/பெண்-அடிமையானாள்-Tamil-தந்தை-பெரியார்-ebook/dp/B78L2DZG8
பெண் ஏன் அடிமையானாள் - சில வரலாற்று செய்திகள்...
- பசு.கவுதமன்
"பெண் ஏன் அடிமையானாள்” நூலுக்கான முன்னுரையோ, அறிமுகமோ அல்ல இது, ஆனால் நூல் குறித்தும், அதனை முதன் முதலில் வெளியிட்ட பதிப்பகம் குறித்தும் சில வரலாற்றுப் பிழையான செய்திகள் தொடர்ச்சியாகப் பதிவாகிக்கொண்டிருப்பதால் தமிழ்கூறும் நல்லுலகின் பதிவேடுகளில் முறையான, சரியான செய்தியினை பதிவிட வேண்டிய அவசியம் கருதியே இதனை எழுத நேர்ந்தது.
"அவர் (பெரியார்) அய்ரோப்பிய பயணத்தில் இருக்கும் போதே 'பகுத்தறிவாளர் நூற் பதிப்புக் கழகம்' என்னும் பதிப்பகத்தைச் சுயமரியாதைத் தோழர் சாத்தான்குளம் அ. இரா கவன் இங்கே தொடங்கிவிட்டார்" என்று தோழர் வே. ஆனைமுத்து அவர்கள், "பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள்" இரண்டாம் பதிப்பிற்கான நன்றியுரையில் (பக்கம் LXXXI) குறிப்பிடுகின்றார். அதுபோலவே "பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள்" முதல் பதிப்பிலும் (1.7.1974) இரண்டாம் பதிப்பிலும் (15.12.2) பெண் ஏன் அடிமையானாள் வெளியிடப்பட்ட முதல் பதிப்பிற்கான ஆண்டாக 1934 என்று குறிப்பிடுகின்றார். 24இல் 22 ஆவது பதிப்பினை வெளியிட்ட பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் முதல் பதிப்பு 1992 என்று குறிப்பிடுகின்றது. அதுபோலவே 217லில் இந்நூலின் 33 வது பதிப்பினை வெளியிடுகின்றபோது முதல் பதிப்பு 1942 என்று குறிப்பிடுகின்றது. பெரும்பாலும் இதுவரை கிடைத்துள்ள பதிப்புகள் எல்லாவற்றிலும் ஈ.வெ.ராமசாமி, 1.1.1942, ஈரோடு, என்று பதிவிட்ட முன்னுரையோடு கூடியதாகவே இருப்பதால் அல்லது அது குறித்த 'தேடுதல் தேவை இல்லை' என்ற காரணத்தால் அதுவே முதல் பதிப்பிற்கான ஆண்டு என்று கருதியிருக்கக்கூடும். அதுமட்டுமல்ல நூலில் இடம் பெற்றுள்ள 1 அத்தியாயங்களிலும் அக்கட்டுரைகள் இடம் பெற்ற குடி அரசு இதழ், அது வெளியான தேதி பற்றிய குறிப்புகள் பிரசுரிப்போரால் சொல்லப்படவில்லை எனவே அது வெளியான ஆண்டு 1942 ஆக இருக்கலாம் என்றும் கருத வாய்ப்பு உண்டு. ஆனால் உண்மை அதுவல்ல. 1933யில் வெளியிடப்பட்ட தொகுப்பு திருத்தப்பட்டு, 1942யில் பெரியாரவர்களால் முன்னுரை எழுதப்பட்டு புதிய பதிப்பாக வெளியிடப்பட்டிருக்கலாம் அதற்கான வாய்ப்பும் உண்டு.
தந்தை பெரியாரவர்களின் அய்ரோப்பிய பயணம் 1931 டிசம்பர் 13 துவங்கி 1932 நவம்பர் 11 அவர் ஈரோடு வந்தடைவதோடு முடிகின்றது என்பதனையும், அவரது பயணம் துவங்குவதற்கு முன்பே 4. 1. 1931 தொடங்கி 2.11.1931 வரைக்குமான குடி அரசில் "சமதர்ம அறிக்கை "யின் முதல் பாகத்தினை மொழிபெயர்த்து வெளியிட்டார் என்பதனையும் சேர்த்தே இங்கே கவனத்தில் கொள்ளவேண்டும்.
இனி அது தொடர்பான செய்திக்குள் செல்வோம்.
தமிழ்நாட்டின் பதிப்புத் துறையில் ஈரோட்டிற்கென்று ஓர் தனியிடம் உண்டு. தமிழர்களின் - தமிழ்நாட்டின் சமூக, அரசியல் தளங்களில் ஆழமாகவும், அகலமாகவும் உழுது பதிந்த 'குடிஅரசு' தந்தை பெரியாரால் ஈரோட்டில்தான் விதைக்கப்பட்டது. 'குடி அரசை' ஒழிக்கச் செய்த தொடர்ச்சியான முயற்சியால் 'புரட்சி'யும், 'ரிவோல்ட்'ம், பகுத்தறிவு'ம் அங்கிருந்து தான் புறப்பட்டன. பெரியாரின் பேச்சுக்களையும், எழுத்துக்களையும் திராவிடன் பதிப்பகம், பகுத்தறிவு வெளியீடு, உண்மை விளக்கப் பதிப்பகம், பெரியார் தன்மானப் பிரச்சார நிலையத்தார், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் போன்றவை சென்னையிலிருந்தும், திருச்சியிலிருந்தும் வெளியிட்டிருப்பினும் ஈரோட்டின் குடி அரசு பதிப்பகம், தமிழன் அச்சகம், பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம் லிமிட்டெட் ஆகியவை முதன்மையான பதிப்பகங்கள் ஆகும்.
தோழர் வே.ஆனைமுத்து அவர்கள் குறிப்பிடுவது போல அது, ''பகுத்தறிவாளர் நூற் பதிப்புக் கழகம்" அல்ல. ஈரோட்டில் துவக்கப்பட்ட இந்த ''பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம் லிமிட்டெட்" தான் இந்தியத் துணைக்கண்டத்தில் முதன்முறையாக' என்று கூட சொல்லலாம் 192 களின் இறுதியில் பொதுமக்களிடமிருந்து பங்குதொகைப் பெற்று அவர்களை பங்குதாரர்களாக்கி நடத்தப்பட்ட பதிப்பகம் ஆகும். 1947களுக்குப்பின் கேரளத்திலும், மேற்கு வங்கத்திலும் இவ்வாறான பதிப்பகங்கள் செயல்பட்ட செய்திகள் உண்டு. ஆனாலும் இதற்கும் தந்தை பெரியார் தான் முன்னோடி.
சாத்தான்குளம் அ. இராகவன் அவர்களை காரியதரிசியாகக் கொண்டு, "குடி அரசில் ஏற்கனவே அறிவித்திருந்தபடி நாடெங்கும் மூடநம்பிக்கையையோட்டி பகுத்தறிவுக் கொள்கையை பரப்பும் நோக்கத்துடன் ஆங்கிலம், தமிழ் முதலிய பலமொழிகளில் மூலமாய் பத்திரிக்கைகள் நூற்கள் முதலியன வெளிப்படுத்தியும், மொழிபெயர்ப்பு நூற்கள் பல வெளியிட விரும்பியும் பகுத்தறிவு இயக்கத்தை ஆதரிக்கும் தோழர்களை டைரக்டர்களாகக் கொண்டு பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம் 13.12.1932ல் லிமிட்டெட் கம்பெனியாக ரிஜிஸ்டர் செய்யப்பட்டு...'' (குடிஅரசு 8.1.1933),
2.1.1933, தோழர் வி.வி. சி.ஆர். முருகேசமுதலியார் அவர்கள் தலைமையில் நடை பெற்ற, பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம் லிமிட்டெட் திறப்புவிழாவில் தோழர்கள் டி.எம். நரசிம்மாச்சாரி, பி, ஏ.பி.எல்; எஸ். மீனாட்சிசுந்தரம் பி.ஏ. எல்.டி; கேசவலால்; ஈ.வெ. ராமாசாமி ஆகியோர்கள் பகுத்தறிவு' என்பது பற்றி பேசினார்கள் (குடி அரசு 22.1.1933). இது ஏன் துவக்கப்பட்டது என்பது குறித்து சந்தேகநிவர்த்தி' என்று 12.2.1933 குடி அரசில் எழுதுகின்றார்,
''பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம் என்பதாக ஒரு கம்பெனியை பங்கு ஒன்றுக்கு ரூ. வீதம் 3 பங்குகள் கொண்ட 3 ரூ மூலதனத்துடன் லிமிட்டெட் கம்பெனியாக நடத்த ஏற்பாடு செய்து துவக்கவிழாவும் செய்தாகிவிட்டது. இதுவரை 25 பங்குதாரர்கள் வரை சேர்ந்து இருக்கிறார்கள்.
இக்கழகத்திற்கு தோழர் அ. ராகவன் அவர்கள் நிரந்த அதாவது ஆயுள் காரியதரிசியாய் இருக்கிறார். கழகத்தின் முக்கிய நோக்கம் பகுத்தறிவு வளர்ச்சியை ஆதாரமாகக் கொண்ட ஆதாரங்கள், புத்தகங்கள் வெளியிடுவதே ஆகும். இந்தப்படியாக ஒரு தனி ஸ்தாபனமாய் அதாவது சுயமரியாதை இயக்கத்துடன் பிணைந்ததாய் இல்லாமல் தனித்து நின்று நடைபெற தக்கதாய் நடத்தப்பட என்ன அவசியம் என்று வினவலாம். இவ்வினாவுக்கு விடை தோழர் அ. ராகவனால் சுமார் 4, 5 மாதங்களுக்கு முன்னதாகவே குடி அரசு பத்திரிக்கையில் வெளியிடப்பட்டிருக்கின்றது. என்றாலும், இப்போதும் சில தோழர்களுக்கு இது விஷயத்தை அறிய ஆவல் இருப்பதாய் காணப்படுகிறது. அதாவது சுயமரியாதை இயக்கமும், அது சம்பந்தமாய் நடைபெறும் பிரசாரமும், வெளியிடப்படும் பிரசுரங்களும் இது சமயம் பலருக்கு அரசியல் சம்பந்தமுடையதாகக் காணப்படுகின்றதுடன், அரசியல் அடக்குமுறைக்கு ஆளாக நேரிடுமோ என்ற அச்சமும் ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது. ஆதலால் அவ்வித சந்தேகமும் பயமும் இல்லாமல் இருப்பதற்கு அதாவது பகுத்தறிவு விளக்கம் என்பது யாவருக்கும் பொதுவானது என்பதோடு, மக்களுக்குப் பகுத்தறிவை ஏற்படுத்த யாவரும் பிரவேசித்துத் தங்களால் கூடிய உதவி செய்வதற்குத் தகுதியுடையதாயும், அரசாங்க அதிருப்திக்கு ஆளாகாததாயும் இருக்கக் கூடியதான ஒரு தனிப்பட்ட ஸ்தாபனம் இருக்குமானால் அது என்றும் நிலைத் திருக்கக் கூடும் என்கின்ற எண்ணத்தின் மீதும்.
அரசியல் சம்மந்தத்திலிருந்து பூரணமாய் பிரிந்து நிற்பதற்கும், லாப, நஷ்டப் பொறுப்பு வரையறுப்பதற்கும் ஆகவே இக்கழகம் ஏற்பாடு செய்யப்பட்டு ரிஜிஸ்டர் செய்யப்பட்டிருக்கின்றது என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.' என்ற விளக்கத்துடன் துவக்கப்பட்ட இக்கழகத்தின் முதல் வெளியீடுதான், தந்தை பெரியார் அவர்களின் அரிய படைப்பான, " பெண் ஏன் அடிமையானாள்'' ஆகும். 1.9.1933 தேதியிட்ட குடி அரசில், பக்கம் 18 இல் முதல் விளம்பர அறிவிப்பும் 17.9.1933 (தந்தை பெரியாரவர்களின் பிறந்தநாளன்று) தேதியிட்ட குடிஅரசில் முதல் முழுப்பக்கத்தில் நூல் குறித்த செய்தியும் வெளியிடப்படுகின்றது.
தோழர் அ. இராகவன் அவர்கள் உள்நாட்டிலும், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளிலும் பங்குதாரர்களை சேர்க்கப் பயணம் மேற்கொண்டுவிட்டு 5.7.1933 யில் ஈரோடு வந்து நூற்பதிப்பு வேலைகளை துவக்குகின்றார். லண்டன் பகுத்தறிவுக் கழகத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு ரஸ்ஸல், இங்கர்சால், லெனின், ஜீன் மெஸ்லியர், வால்டையர் போன்றவர்களின் படைப்புகளை தோழர்கள் ஈ.வெ.ரா, எஸ். இராமநாதன், ப.ஜீவானந்தம், மா.சிங்காரவேலு, குத்தூசி குருசாமி போன்ற பலரின் மொழிபெயர்ப்பில் தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்கியுள்ளது இந்நூற் பதிப்புக் கழகம். தோழர் மா.சிங்காரவேலரின், "மெய்ஞ்ஞானமுறையும் - மூடநம்பிக்கையும் " போன்ற படைப்புகளையும் இன்னும் பலரது படைப்புகளையும் பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம் வெளியிட்டுள்ளது. எண்ணற்ற அரிய நூல்களை தமிழில் மொழிபெயர்த்து, மொழி பெயர்ப்புத் துறையில் அளப்பெரிய பங்காற்றி நூல்களைப் பதிப்பித்த இக்கழகம், அதனுடைய முதலாவது மஹாசபை கூட்ட அறிவிப்பு 3.7.1933 குடி அரசுலிருந்து தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்டு நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் 3.6.1934 புரட்சியில் அறிவிப்பு வெளியாகின்றது. அந்த முதல் மஹாசபைக் கூட்டம் நடைபெற்றதா என்பதற்கும் பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம் லிமிட்டெட் தொடர்ந்து செயல்பட்டதா என்பதற்குமான தரவுகள் கிடைக்கப் பெறவில்லை என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகத்தின் முதல் வெளியீடான "பெண் ஏன் அடிமையானாள் அந்தத் தலைப்பிற்காக தந்தை பெரியாரவர்களால் எழுதப்பட்ட கட்டுரைகளைக் கொண்டதல்ல. 22.8.1926 தொடங்கி 18.1.1931 வரை பல்வேறு சந்தர்ப்பங்களில் குடி அரசில் தந்தை பெரியாரால் எழுதப்பட்ட பெண்ணியச் சிந்தனைக் கட்டுரைகளின் தொகுப்பிற்கு " பெண் ஏன் அடிமையானாள்'' என்ற கவித்துவமான - காலத்தால் அழிக்கப்பட முடியாத தலைப்பிடப்பட்ட நூல். (அது நூலாகத் தொகுக்கப்படும் போது அல்லது 1942இல் அவரது முன்னுரையின்படி) அவராலேயே சில இடங்களில் வார்த்தைகளும், வாக்கிய அமைப்பும் மாற்றப்பட்டுள்ளதையும் சில கட்டுரைகளில் சில பத்திகள் புதிதாகச் சேர்க்கப்பட்டு இன்னும் அர்த்த செறிவுடன் விளங்குவதையும் அறிய முடிகின்றது.
இந்தப் பதிப்பில் ஒவ்வொரு கட்டுரையின் முடிவிலும் அடிக்குறிப்பும், கூடுதலாக இந்நூலில் இடம் பெற்றுள்ள இரண்டாவது அத்தியாயமான "வள்ளுவரும் கற்பும்" என்ற கட்டுரையினை எழுதக் காரணமாக அமைந்த பிறிதொரு கட்டுரையும், அய்ந்தாம் அத்தியாயமான “மறுமணம் தவறல்ல'' என்ற கட்டுரை எழுதக் காரணமாக அமைந்த பெரியாரவர் களின் சொற்பொழிவும் இதில் இடம்பெறுகின்றது. அதுபோன்றே, "பெண் ஏன் அடிமை யானாள்" நூலுக்காகக் குடி அரசில் வெளியிடப்பட்ட முதல் விளம்பர அறிவிப்பும் இந் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒருமுறை ஒரு வெளிநாட்டு பத்திரிகை நிருபர் தந்தை பெரியாரிடம் விவேகானந்தர் குறித்து கேட்கும் போது," நீங்கள் இந்துமதக் கடவுள்கள் பற்றியும், இந்து மதம் பற்றியும் இப்படி பேசுகின்றீர்களே உங்கள் நாட்டிலிருந்து வந்த விவேகானந்தர் இந்து மதம் குறித்து எங்கள் நாட்டில் சிகாகோவில் எவ்வளவு உயர்வாகப் பேசினார்" என்றாராம். அதற்கு பதிலளித்த பெரியார், "முட்டாள்தனம் என்பது இந்தியாவுக்கு மட்டுமே சொந்தமா?" என்று கேட்டாராம். அதுபோலவே 195 இல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற ரஸ்ஸல் 1929 களில் எழுதிய, 262 பக்கங்கள் கொண்ட Mariages and Morals குறித்து பெரியார் அவர்களிடம், "உங்கள் இருவரின் சிந்தனைகளும் ஒன்று போலவே இருக்கின்றது'' என்று சொன்ன போது பெரியார், "ரெண்டும் ரெண்டும் நாலுன்னு ஒலகம் பூரா எங்க கூட்னாலும் நாலுன்னுதா வரும். கூட்றவன் ஒழுங்கா கூட்டனும்" என்றாராம் என்று நான் செவிவழி கேட்ட செய்தியோடு இந்நூல் குறித்த, அதனை வெளியிட்ட பதிப்பகம் குறித்த வரலாற்று குறிப்பினை நிறைவு செய்கின்றேன்.