ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்விமுறை
இன்றைய கல்விமுறை என்பது எடுத்துச் சொல்வது என்ற நோயால் அவதியுறுகிறது’ என்று பாலோ ஃப்ரையிரே இந்த நூலில் அறிவிக்கிறார். ‘எடுத்துச் சொல்வது’ என்பதே வகுப்பறை கல்வியின் ஒரே அம்சம். இந்த உறவு அடிப்படையில் எடுத்துச்சொல்வது ஒரு மனிதரையும் (ஆசிரியர்), பொறுமையோடு கேட்டுக்கொண்டே இருக்கும் ஒரு பருப்பொருளையும் இன்றைய கல்வி உள்ளடக்கமாக கொண்டுள்ளது. ஆசிரியர் என்பவர் சகல அதிகாரமும் படைத்தவர். யதார்த்தத்தை அசையாத தன்மை கொண்ட இருக்கமடைந்த மாற்றமுடியாத ஜடப்பொருளாக (பாடமாக) தனித்தனிப் பெட்டிகளாய் உடைத்து இலக்காக பாவித்து முன்வைப்பதைக் காண்கிறோம். பாடப்பொருள் மாணவர்களின் அனுபவ அறிவுக்கு அப்பாற்பட்டதாக உள்ளது. ஆசிரியரது வேலையே மாணவர்களை, யதார்த்தத்திற்கு ஒவ்வாத அவர்களது நேரடித்தொடர்பு ஏதுமற்ற ஆனால் மிகமிக முக்கியம் என அவர்கள் கருத வேண்டியவைகளால் இட்டு நிரப்புவதே ஆகும். வங்கி சேமிப்பு போல நடக்கும் கல்விமுறையில் அறிவு என்பது தாங்கள் தகவல்களாக அதிகம் சேமித்து வைத்திருப்பதாய் கருதும் சிலரால், ஒன்றுமே தெரியாது என்று கருதப்படும் பலருக்கு ‘பரிசாக’ வழங்கப்படும் ஒன்றாய் அர்த்தப்படுத்தப்பட்டுள்ளது என்கிறார் ஃப்ரையிரே.