மோடி ஏன் நமக்கானவர் அல்ல?
மோடி ஏன் நமக்கானவர் அல்ல?
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
மோடி ஏன் நமக்கானவர் அல்ல? - பழனி ஷஹான்:
பொருளாதாரம், சமூகம், பண்பாடு ஆகிய தளங்களில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு எவ்வாறு செயல்பட்டு வருகிறது, அதனுடைய விளைவுகள் பாதிப்புகள் என்ன என்பது குறித்து பழனி ஷஹான் தனது கருத்துகளை இச்சிறுநூலில் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார். 2014ஆம் ஆண்டு மே மாதம் பதவியேற்ற மோடி அரசு ஜூன் மாதத்தில் உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருந்த ஒன்றரை லட்சம் ஆவணங்களை அழித்திருக்கிறது. அங்கிருந்த ஆவணங்களில் மகாத்மா காந்தியின் கொலை வழக்குத் தொடர்பான ஆவணங்களும் இருந்தன. இந்தச் செய்தி வெளியானபோது, அது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கோப்புகள் அழிக்கப்படுவதற்கான காரணங்களையும் அழிக்கப்படும் கோப்புகளின் பெயர்களையும் ஆவணக்காப்பகத்தோடு கலந்து ஆலோசிக்க வேண்டுமென்றும் இது தொடர்பான சட்டப்பிரிவு 113 கூறுகிறது. ஆனால் மோடி அரசு இதில் ஒன்றைக்கூட பின்பற்றவில்லையென்று நூலாசிரியர் குறிப்பிட்டிருக்கிறார்.
குஜராத் மாடல் இந்தியா முழுமைக்கும் அமலாக்கப்படும் என்றார் மோடி. குஜராத் மாடல் என்பது கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு சலுகை அளிக்கும் மாடல்தான். தமிழகத்தில் சமீபத்தில் ஜி.எஸ்.டி. வரித் திட்டம் அமலாக்கப்பட்டபோது, வேறு பல மாநிலங்களை விட குஜராத் மாநிலத்தைச் சார்ந்த சிறு, குறு தொழில் முனைவோர் உள்ளிட்ட லட்சக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கிப் போராடினார்கள். தலித் மக்கள் தாக்கப்பட்டதை எதிர்த்து குஜராத் மாநில தலித் மக்கள் எழுச்சியுற்றுப் போராடியதை நாடே பார்த்தது. இவ்வாறு மோடி அரசின் 3 ஆண்டு கால செயல்பாடு பற்றி ஏராளமான துல்லியமான விவரங்களோடு நல்ல நடையில் நூலாசிரியர் விவரித்திருக்கிறார். மோடியின் ஆட்சியைப் புரிந்து கொள்வதற்கு இந்நூல் உதவியாக இருக்கும்.