கடவுள் கற்பனையே:ASK
ஜாதி, மதம், கடவுள், ஜாதிக் கொடுமைகள், மூடப் பழக்க வழக்கங்கள் அனைத்தும் கடிந்தொழிந்தால்தான், விஞ்ஞான வளர்ச்சியை நன்கு புரிந்து கொண்டு, அதன் அடிப்படையில் மனிதன் மனிதனாகத் திகழ முடியும், முற்போக்கு எண்ணங்களுக்கு இடம் கொடுப்பான். ஆகவேதான், சமுதாய மாற்றத்தைக் கொண்டுவர வேண்டிய தொழிலாளி வர்க்கம், பிற்போக்கு அமைப்பிற்கு இருப்பிடமாயுள்ள ஜாதி, சமயம், கடவுள், மூடப்பழக்க வழக்கங்கள் அனைத்தையும் அறவே ஒழிக்க வேண்டும்.
விஞ்ஞான அடிப்படையில் சமுதாயத்தை இவ்வாறு காண்பது தான் உண்மை என்பதனை ஓரளவு விளக்கவே இந்நூல் எழுதப்பட்டது. இயற்கையும், சமுதாயமும் சில கோட்பாடுகளின் அடிப்படையில்தான் இயங்குகின்றன: இக்கோட்பாடுகள் எவை-இவற்றைப் புரிந்து கொண்டு எவ்வாறு செயல்பட வேண்டும், புதிய சமுதாயத்தைச் அமைக்க வேண்டும் என்று எடுத்துச் சொல்ல இந்நூல் எழுதப் பட்டுள்ளது.