
கடவுள் என்பது என்ன?
மனித வாழ்க்கை பொருளியல் தேவைகளை (Material needs) மட்டுமே கொண்டதாக அமைந்திருக்கவில்லை. மாறாக அது மனவியல் தேவைகளையும் (spiritual needs) உள்ளடக்கியிருக்கிறது . என்றாலும், இரண்டும் முற்றாக வெவ்வேறானதாக இருந்துவிடுவதில்லை. காரணம், இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்தே நிலவி வருகின்றன. பொருளியல் தேவைகள் மனவியல் சார்ந்தும், மனவியல் தேவைகள் பொருளியல் சார்ந்துமே வெளிப்பட்டு வருகின்றன. மனிதன் தன் பொருளியல் மனவியல் தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்காக இயற்கையோடும் சமூகத்தோடும் கொள்ளும் உறவும் அது சார்ந்த செயல்பாடுகளுமே வாழ்க்கை ஆகிறது. இவ்வாழ்க்கையின் தோற்றம், வளர்ச்சி, மாற்றம், முடிவு பற்றிய சிந்தனை முறையே தத்துவம் எனப்படுகிறது. தமிழ் மண்ணுக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட தத்துவப் பாரம்பரியம் உண்டு. எனினும், போதுமான சான்றாதாரங்கள் காணக்கிடைக்காத நிலை யில் தமிழக வரலாற்றை அதன் கால வரிசைப்படி முறைப்படுத்தி தொகுத் துக் கொள்வதில் சிரமம் இருப்பது போலவே தமிழகத்தின் தத்துவ வரலாற்றைத் தொகுத்துச் சொல்வதிலும் சிரமம் இருக்கிறது. தமிழர்களின் தொன்மையான தத்துவம் பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்டதும் நடப்புலக வாழ்வைக் குறிக்கோளாகக் கொண்டது மாகவே இருந்து வந்திருக்கிறது. இதனால் இயல்பாகவே இத்தத்துவம் கடவுள் மறுப்பு வாதத்தைத் தன் கோட்பாடாகக் கொண்டிருந்திருக்கிறது.
இதுவே பலராலும் பூதவாதம், சாருவாகம், நாத்திகம், ஏதுவாதம், இயல்பு வாதம், பொருள் முதல் வாதம், (பிரகிருதி வாதம்), விதண்டா வாதம், என அவரவர் புரிதல் அல்லது கோட்பாட்டு நிலைக்கேற்ப பல பெயர்களில் அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. நாம் வாழும் உலகையும் அதை உள்ளடக்கிய பேரண்டத்தையும் பஞ்சபூதங்களின் சேர்க்கையாகவே கண்டிருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.