இந்தி எதிர்ப்பு ஏன்?
யார் இந்த நாட்டை ஆள்வது? நானா? இல்லை இராமசாமி நாய்க்கரா? பார்த்து விடுகிறேன் என்ற ஆணவம் ஆர்ப்பரிக்க இந்தியைத் தமிழகத்தில் 1938-ல் கட்டாய பாடமாக அறிமுகப்படுத்தினார் தன்னிகரற்ற அரசியல் தந்திரி என்று பாராட்டப்படுகிற இராசகோபாலாச்சாரியார். அவரை அடியொற்றி இரண்டாம் முறையாக ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் இந்தியைத் திணிக்க முயன்றார். மீண்டும் ஒரு முறை பெருந் தலைவர் காமராசர் ஆட்சியில் 1957-ல் இந்தித் திணிப்பு முயற்சி தொடங்கி முனை முறிந்துப் போயிற்று. அதென்ன தமிழ்நாட்டிலே மட்டுமேதானே இந்தித் திணிப்பு எதிர்க்கப்படுகிறது என்பவர்களுக்கு ஒரு வார்த்தை இந்தி பேசும் மாநிலத்தவரே அதைப்பற்றி அக்கறையே காட்டாதிருந்த நேரத்தில் முதன் முதலாகப் பள்ளிக்கூடங்களில் இந்தி கட்டாய பாடமாக்கப்பட்டது தமிழகத்தில் மட்டுந்தானே! இந்தி மட்டுமே ஆட்சிமொழியாகத் தகுதி பெற்றதா? என்பதெல்லாம் பேசிச் சலித்துப் போன வாதங்கள்.