புத்தரா கார்ல் மார்க்சா
புத்தரா கார்ல் மார்க்சா - டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்
புத்தரா, கார்ல் மார்க்ஸா?
கார்ல் மார்க்ஸ், புத்தர் ஆகிய இருவருக்கிடையிலான ஓர் மதிப்பீடு வேடிக்கையானதாகக் கருதப்படலாம். இதில் வியப்படைவதற்கு ஏதுமில்லை. மார்க்ஸுக்கும் புத்தருக்கும் இடையே 2381 ஆண்டு இடைவெளி உள்ளது. புத்தர் கி.மு. 563-ல் பிறந்தவர். கார்ல் மார்க்ஸ் கி.பி. 1818-ல் பிறந்தவர். கார்ல் மார்க்ஸ் புதியதொரு அரசியல்- பொருளாதாரக் கொள்கையின் சிற்பியெனக் கருதப்படுபவர். இதற்கு மாறாகப் புத்தரோ அரசியலுக்கும், பொருளாதாரத்திற்கும் தொடர்பேதுமில்லாத ஒரு சமயத்தின் நிறுவனரென நம்பப்படுபவர். இந்த அளவிற்குக் காலத்தாலும் வெவ்வேறான சிந்தனைப் போக்காலும் வேறுபட்ட இரு மாமனிதர்களை உடன்பாடாகவோ மாறுபாடாகவோ ஒப்பிடமுயலும் 'புத்தரா, மார்க்ஸா?' என்னும் இந்தத் தலைப்பு நிச்சயமாக விசித்திரமானதாகவே தோன்றும்.
மார்க்ஸையும் புத்தரையும் ஒரு சேரவைத்துப் பார்க்கும் நோக்கத்தையே மார்க்சிஸ்டுகள் நிச்சயம் எள்ளி நகைக்கக்கூடும். மார்க்ஸ் மிகவும் புதிய காலத்தைச் சேர்ந்தவர்; புத்தரோ மிகப்பண்டைய காலத்தவர். தங்கள் தலைவரோடு ஒப்பிடுகையில் புத்தர் மிகவும் தொன்மைக் காலத்தவர் என்று மார்க்ஸிஸ்டுகள் கருதலாம். இவ்விருவருக்கிடையே என்ன ஒப்புமை இருக்கக் கூடும்? ஒரு மார்க்ஸிஸ்ட் புத்தரிடம் கற்றுக் கொள்வதற்கு என்ன இருக்கிறது? புத்தர் ஒரு மார்க்ஸிஸ்டுக்கு என்ன கற்பிக்க முடியும்? எனினும் இருவரிடையிலான ஒப்பீடு கவர்ச்சிமிக்கது; கற்பதற்குரியது. இவர்கள் இருவரையும் கற்று இவ்விருவருடைய கொள்கைகளிலும் ஈடுபாடு கொண்டுள்ளவன் என்ற வகையில் இவர்களுக்கு இடையிலான ஒப்பீட்டினை வலிந்து மேற் கொண்டவனாகியுள்ளேன். மார்க்ஸிஸ்டுகள் தங்களுடைய விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டுப் புத்தரைப் படித்தறிந்து அவர் எந்தக் கொள்கைகளைப் பற்றி நின்றார் என்பதைப் புரிந்து கொள்வார்களேயானால் அவர்களின் கருத்தோட்டத்தில் நிச்சயமாக மாற்றம் ஏற்படும் என்று நான் உணர்கிறேன். புத்தரை ஏளனம் செய்ய வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கும் அவர்கள் உடனே பணிந்து போற்றத் தொடங்கி விடுவார்கள் என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கும். ஆயினும் ஒன்றை மட்டும் உறுதியாகக் கூறமுடியும். புத்தருடைய போதனைகளில் அவர்கள் கவனித்துப் போற்றக்கூடியவை உள்ளன என்பதுதான் அது.