பாலம்மாள் முதல் பெண் இதழாசிரியர்
பாலம்மாள் முதல் பெண் இதழாசிரியர்
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் ஆண்களின் சிந்தனைகள் தொகுக்கப் படுகின்றன. பெண்களின் சிந்தனைகளுக்கு முக்கியத்துவம் தரப்பட வில்லை. பெண் விடுதலை குறித்த எழுத்துகளில் ஆண் சிந்தனையின் ஆதிக்கம் இருக்கிறது. கல்வி, திருமண வயது, கைம்பெண் மறுமணம் எனப் பெண் விடுதலை குறித்துப் பிரித்தானிய ஏகாதிபத்திய இந்தியாவில் நடைபெற்ற விவாதங்களில் தங்கள் நிலைப்பாட்டைப் பெண்கள் எடுத்துரைத்தனர். அவர்களில் வி. பாலம்மாள் குறிப்பிடத்தகுந்தவர். அவரது சிந்தனைகள் இங்குத் தொகுக்கப்பட்டுள்ளன. இவர் ‘‘ஸகோதரி வி. பாலம்மாள்'' என அழைக்கப்பட்டார். மணவாழ்வைத் துறந்தவர். தமிழ், கன்னடம், சமஸ்கிருத மொழிகளில் திறமை பெற்றவர்.
இப்புத்தகத்தை பேரா. கோ. ரகுபதி அவர்கள் தொகுத்துள்ளார். தமிழ் இந்து, ஆனந்த விகடன் ஆகிய பத்திரிக்கையில் இப் புத்தகத்தைப் பற்றிய விமர்சனங்கள் வந்துள்ளது.
பெண் சிந்தனையைத் தமிழ்ப் பதிப்புலகம் பதிப்பிக்கவில்லை என்ற குறையை ‘மாற்றத்துக்கான மகளிர் நூல் வரிசை’ நீக்கும். இதன் தொடக்கப் புள்ளி சிந்தாமணி இதழ் அதிபர் வி. பாலம்மாள். தன்னந்தனிப் பெண்ணாக நின்று இதழாசிரியராக, இதழ் அதிபராக நிர்வாகப் பொறுப்பை முழுவதும் அவர் ஏற்று பெண்களுக்கென வெளியிட்ட முதல் இதழ் சிந்தாமணி. அக்கால இதழ்களான தாய்நாடு’, ‘குடியரசு’, ‘ஜஸ்டிஸ்’, ‘இந்து சாதனம்’, ‘பொதுஜன மித்திரன்’, ‘தாரூல் இஸ்லாம்’, ‘தேசோபகாரி’ போன்றவை ‘சிந்தாமணி’யை வரவேற்றன. புராதனத் தமிழ்ச் சமூகத்தில் பெண்கள் பெற்றிருந்த உன்னத நிலையை மீட்டெடுக்கப் பாலம்மாள் ‘சிந்தாமணி’ வழியாகப் போராடினார். தொழிலாளிகளின் உழைப்பின் விளைவுதான் முதலாளிகளின் வளர்ச்சி எனக் கூறிய பாலம்மாள் பெண், தேசம், தாழ்த்தப்பட்டோர் விடுதலையை நேசித்தார்; சாதி, வர்க்கம் கடந்த மணவுறவை ஆதரித்தார். அவருடைய நூல்களுக்கு டாக்டர் எஸ். கிருஷ்ணஸ்வாமி அய்யங்கார், ஹிந்து இதழாசிரியர் எஸ். கஸ்தூரிரங்க அய்யங்கார் போன்ற ஆளுமைகள் முன்னுரை எழுதினர். பெண் முன்னேற்றத்திற்காகப் பாலம்மாள் எழுதிய தலையங்கம், கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.