அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் களஞ்சியம்
அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் களஞ்சியம்
தொண்டறத்தின் தூய உருவமான அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையாரின் நூற்றாண்டு தொடங்குகிறது 2019 மார்ச் 10ஆம் நாள் அன்று! - அவர் பிறந்த ஊராம் வேலூர் மாநகரி லிருந்து!
அன்னை மணியம்மையார், சகிப்புத்தன்மைக்கு ஓர் அரிய - ஒப்பற்ற எடுத்துக்காட்டாவார்! காரணம், அவரைப் பற்றிய ஏச்சும், பேச்சும், அவதூறுகளும், வசைமொழிகளும் மலைபோல் வந்தன!
அவரது அமைதியான தொண்டறத்தால் அவை அனைத்தும் பனிபோல் கரைந்தன!
தூற்றியவர்களும், சந்தேகித்தவர்களும் பின்னர், அவர் தொண்டு தூய தொண்டு, என்பதைக் கண்டு, உணர்ந்து, மனதிற்குள் வருந்தி, அவர் பற்றி கூறிய, எழுதிய கருத்துகளை அடிமுதல் நுனிவரை மாற்றிக் கொண்டனர்! அவர்கள் என்ன சாதாரணமானவர்களா?
நாடு போற்றும் நல்அறிஞர்கள்!
1. இராஜாஜி என்றழைக்கப்படும் சி.இராஜகோபாலாச்சாரியார்
2. அறிஞர் அண்ணா
3. புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
தன்னை வெல்வான் தரணியை வெல்வான் என்ற பழமொழிப்படி தரணியை வென்ற தாரகையானார் நம் தாய் - புரட்சித்தாய் - வீரத்தாய் - தொண்டறத்தாய்!
அன்னையார் அடக்கத்தின் முழு உருவம்;
எளிமைக்கு இலக்கணம்;
கொள்கைகளுக்காகவே வாழ்ந்து வரலாறு படைத்த கொள்கை வீராங்கனையாவார்!