அம்பேத்கருக்குப் பிந்தைய தலித் இயக்கங்கள்
டாக்டர் அம்பேத்கரிடம் தலித் மக்கள் வைத்திருக்கும் இவ்வளவு மதிப்புக்கும் மரியாதைக்கும் காரணம் என்ன? இதனைக் கண்டறிவது ஒன்றும் கடினம் அல்ல. அடிமைத் தளையிலிருந்து அவர்களை விடுவிக்கவேண்டும் என்பதையே வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் அவர் சிந்தித்தார்; போராடினார். இதற்காகத் தனது வசதி வாய்ப்புகள் அனைத்தையும் தியாகம் செய்தார். எண்ணற்ற கஷ்ட நஷ்டங்களைப் புறந்தள்ளி உயர்ந்தவர்களில் எல்லாம் உயர்ந்தவராக நின்று, சாதி அடிப்படையில்தான் உயர்வு என்ற சித்தாந்தத்தைப் பொய்ப்பித்தார். இறுதியில் தலித் மக்களின் எதிர்காலப் பாதை ஒளி மயமாவதற்கு விளக்காகத் திகழ்ந்தார்.
பல நூற்றாண்டு கால வரலாற்றில் ஒரு சிலர் தலித் மக்களின் துயரங்களை உணர்ந்தனர். அவர்களை மனிதர்களாக மதித்தனர். மற்றவர்களைப்போல தங்களையும் மதித்து நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தினர். இந்த சிலரில், அம்பேத்கர், தலித் மக்களில் ஒருவராக விளங்கினார். தனது உயர்ந்த நிலையைத் துறந்து தலித் மக்களின் சாதாரண வாழ்நிலைக்குத் தன்னை இறக்கிக்கொண்டு அவர்கள் உயர்வதற்கு உதவிக்கரம் நீட்டியவர் - அவர்களை மனிதர்கள் நிலைக்கு உயர்த்தியவர் - அம்பேத்கர். கிராமப்புறங்களில் உள்ள நிலமற்ற விவசாயத் தொழிலாளி முதல் உயர் அதிகாரத்தில் உள்ளவர் வரை அம்பேத்கரை உணர்ச்சிப் பெருக்கோடு மதிக்கிறார்கள்