சிதைக்கப்பட்ட மலையகத் தமிழர்கள்
1850களில் இருந்து 2009 ஆம் ஆண்டு வரை மலையகத் தமிழ் மக்கள் ஸ்ரீலங்காவின் வடக்கு குழக்குப் பிரதேசங்களுக்கு வாழ்வைத் தேடிச் செல்ல நேர்ந்தமை, குறிப்பாக மலையகத் தொழிற்சங்கங்கள் இழைத்த துரோகங்கள் போன்ற விடயங்கள் இந்த நூலில் விரிவாக ஆராயப்பட்டுள்ளன. இந்நூலினை ஸ்ரீலங்காவில் பிறந்து தமிழகத்தில் குடியேறிய மு. சி. கந்தையா எழுதியுள்ளார்.
இரண்டு நூற்றாண்டுகளாக இலங்கைப் பெருந்தோட்டங் களில் வாழும் மலையகத் தமிழர்களின் (இந்திய மரபுவழித் தமிழர்) வரலாறு நெடுந்துயரம் நிறைந்தது. கடந்த இருநூறு ஆண்டு களுக்கும் மேலாக இவர்களின் முன்னோர்களின் வாழ்க்கையில், அவர்கள் எதிர்கொண்ட துன்பங்களை குறிப்பிட்ட சொற்களுக்குள் அடக்கி விடமுடியாது. நவீன வாழ்க்கைச் சாலையில் மனித சமூகங்கள் பயணிக்கத் தொடங்கி பல ஆண்டுகள் கடந்த பின்பும் பெருந்தோட்டக் கட்டமைப்பில் அதிக மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை . தினக் கூலிகளாக உழைக்கும் இவர்களுக்கு வழங்கும் ஊதியம் உயிர் வாழ்வதற்காக மட்டுமே வழங்கப்படுகிறது. இவர்கள் வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளை குறைந்த அளவு நிறைவு செய்து கொள்ள வேண்டுமென்றாலும் அதன் தொடக்கப் புள்ளியும் எட்டாத் தொலைவில் உள்ளது.