ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் செங்கல்பட்டு கலெக்டராகப் பதவி வசித்தவர் தான் திரு. திரமென்ஹீர் என்கிற இளம் ஐ.சி.எஸ் அதிகாரி. காலனி ஆதிக்கத்தில் சுரண்டுதலையே முக்கியக் குறிக்கோளாகக் கொண்ட அந்நிய அரசின் ஊழியராக அதன் அங்கமாக வந்த திரமென்ஹீர், தான் நிர்வகித்த செங்கல்பட்டு ஜில்லாவில் இருந்த ஒடுக்கப்பட்ட மக்கள் எந்த அளவுக்கு இழிநிலைக்குத் தள்ளப்பட்டார்கள் என்பதைப் பார்த்தபின், அம்மக்களின் துயர்த் துடைக்க உருப்படியாக என்ன செய்யலாம் என்று யோசித்து எடுத்த முடிவுகள் குறித்த குறிப்பே இந்நூலில் முக்கிய அம்சம். மேலும் கடந்த கால வரலாற்றைச் சரியாகப் புரிந்து கொண்டால்தான் புதுமைகள் படைக்க முடியும்.
அக்காலத்தைப் பற்றிய சரியான கணிப்பு இருந்தால்தான் நாம் நிகழ்காலத்தை விளங்கிக்கொள்ள முடியும். ஆகவேதான், திரமென்ஹீர் சமர்ப்பித்த குறிப்புகள் நூறு ஆண்டுகளுக்குப் பின்னும் முக்கியத்துவம் பெறுகின்றன. வரலாறு தெளிவாகத் தெரிந்தால் தான் நாம் எடுக்கும் முடிவுகள் சரியாக அமையும். அந்த வகையில் இதுவும் ஒரு வரலாற்று ஆவணம் தான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இந்த வரலாற்று ஆவணத்தைப் படிப்பதன் மூலம் நில உரிமை மறுக்கப்பட்ட மக்கள் நிச்சயம் ஒரு நாள் கிளர்ந்தெழுவார்கள்.