பார்த்திவேந்திரவர்மன் இராஜராஜ சோழனே கி.பி.950-985ல் சோழ இராஜ்யம்
பார்த்திவேந்திரவர்மன் இராஜராஜ சோழனே கி.பி.950-985ல் சோழ இராஜ்யம் - சக்திஸ்ரீ
வரலாறு திருத்தி எழுதப்படும் பிரதி என்பது அடிப்படை புதிய தரவுகளைக் கொண்டு நிலவும் அதிகாரம் புதிய வரலாற்றை எழுதும். அது அவ்வதிகாரம் பாதிக்கப்படாத எல்லைவரை அதை அனுமதிக்கும். இராசராச சோழன்தான் பார்த்திவேந்திரனாகத் தொண்டை மண்டலத்தை ஆட்சி செய்தான், சோழ அரியணை ஏறும் வரை - எனும் வரலாற்று மொழிதலால் தற்போது நிலவும் அதிகாரம் எவ்விதப் பிரச்சினைப் பாதிப்புக்கும் உள்ளாவப் போவதில்லை. வரலாற்றில் விடுபட்ட சங்கிலித் தொடர் இணைக்கப்படுகிறது. சோழர் குலக்குடி குடும்ப வரலாறும் அதில் நிலவிய ஆளும் ஆட்சியதிகாரப் போட்டியும் இன்னும் தெளிவாகும். பு வரலாறு எழுதுதலில் இது அவசியமான ஒன்று. முடியாட்சி ஆளும் அதிகாரப் போட்டி எந்த எல்லைவரை நீண்டது. அது எவ்விதச் சமன்பாட்டை மேற்கொண்டது எனப் புரிந்துகொள்ள இவை உதவுகின்றன. பார்த்திவேந்திரன் இராசராச சோழனே என நிறுவ நூலாசிரியரான சக்திஸ்ரீ நிறைய உழைத்திருக்கிறார். கல்வெட்டுகள், அரசாட்சிக் கால வரிசையை நிரல்படுத்துதல், அரசர் வரிசையில் காலக் கிரமத்தில் ஆட்சியதிகாரிகளைப் பட்டியலிடுதல், ஆட்சிப் புவியியல் எல்லை நிர்மானம் எனப் பட்டியலிட்டு ஒப்பாய்வு செய்கிறார். பார்த்திவேந்திரன் யார் எனத் தெளிவுபடுத்தப்படும் நிலையில்தான் சோழ அரசின் அரசதிகாரத்தின் தன்மை பற்றி முழுமையாகப் புரிந்துகொள்ள இயலும். இதனால் பார்த்திவேந்திரனின் தன்னாட்சி பற்றி அறியவேண்டிய நிர்ப்பந்தம் எழுகிறது. இதற்கு சோழர் காலத்தில் அரசாட்சிக் கால நிர்ணயம் தேவை. அந்நிர்ணயம் இந்நூலாசிரியரால் தெளிவாக்கப்பட்டுள்ளது