இந்தியா : வரலாறும் அரசியலும்
இந்தியா ஒரு தேசமாக உருவாகாத காலத்தில் இருந்து... வெள்ளை ஆட்சியாளர்களின் நிர்வாக வசதிக்காக இந்தியா உருவாக்கப்பட்ட குவிமையத்தில் தொடங்கி... வேற்றுமையில் ஒற்றுமை காணாமல் அனைத்து அடையாளங்களையும் சிதைத்து ஓர்மைத் தன்மைக்குள் ஒடுக்கத் திட்டமிடும் இந்தக் காலம் வரையிலான பல நூற்றாண்டு கால வரலாற்றை மீள் பார்வை செய்கிறார் டி.ஞானய்யா. இந்திய விடுதலையை வலியுறுத்திப் போராடியவர்களுக்கு மறைமுகமாக இருந்த கொள்கை நிலைப்பாடுகளும், இந்திய விடுதலையைப் பற்றிக் கவலைப்படாதவர்களின் உண்மையான நோக்கமும் வெளிச்சத்துக்கு வருகின்றன. தேசிய இயக்கமும் பொதுவுடமை இயக்கமும் பல்வேறு காலகட்டங்களில் எடுத்த அரசியல் நிலைப்பாடுகள் அலசி ஆராயப்பட்டுள்ளன. விடுதலைக்குப் பின்னும் இவர்கள் நடந்துகொண்ட நல்ல, கெட்ட முறைகளை தயவுதாட்சண்யம் இல்லாமல் விமர்சனம் செய்கிறார்.
இந்தியா ஒரு தேசமல்ல. பலதேசங்களைக் (nations) கொண்டது. இது ஓர் துணைக்கண்டமுமல்ல. ஐரோப்பா போன்று ஒரு முழுக்கண்டம், ஐரோப்பாவின் வரலாறு போன்றுதான் இந்தியவரலாறும் அமைந்துள்ளது. ஐரோப்பா முழுவதும் ஒத்தஇனம். இந்தியாவில் ஆரியர், திராவிடர், மங்கோலியர் என வேறுபட்ட இனங்கள். ஐரோப்பா முழுவதும் பலதேசமக்கள். ஆனால் ஒத்தநிறம், தோற்றம், கலாச்சாரம் கொண்டவர்கள், இந்தியாவிலோ மக்களின் நிறம், தோற்றம், கலாச்சாரம் வேறுபட்ட அம்சங்களைக் கொண்டவை. ஐரோப்பா முழுவதும் ஒரே மதம், கிறித்துவம். இஸ்லாமியர் வருகைக்கு முன் இந்தியாவில் மதம் என ஒன்று இருந்ததில்லை . இன்று பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறித்துவம், சீக்கியம், ஜாராஸ்ட்ரியம் (பார்சி) மதங்களைச் சார்ந்தவர்களால், மதத்தால் வேறுபட்டிருக்கின்றனர்.