ஆஷ் படுகொலை - புனைவும் வரலாறும்
ஆஷ் கொலை வழக்கு குறித்து ஏற்கனவே வெளிவந்துள்ள புத்தகங்கள், கட்டுரைகள், காவல்துறை மற்றும் நீதிமன்ற ஆவணங்கள் ஆகியவற்றை மிக விரிவாக பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டுள்ள ஆசிரியர் அவற்றில் தெளிவுற வேண்டிய விசயங்கள் குறித்து அவற்றோடு தொடர்புடைய ஆய்வாளர்களைச் சந்தித்து உரையாடி விளக்கம் பெற்றிருக்கிறார். வாஞ்சிநாதனின் தொடர்பெல்லைக்குள் இருந்த ஆளுமைகள், அவர்களது அரசியல் நிலைப்பாடுகள், அன்றைய அரசியல் சூழல், காலனியாதிக்க எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றையும் தொகுத்தெடுத்துக் கொண்டு அவர் வாஞ்சிநாதனின் கடிதத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்கிறார். தான் செத்துப்போன பிறகு பாராட்டப்பட வேண்டுமென்றோ நினைவுகூரப்பட வேண்டுமென்றோ எதிர்பார்த்து எழுதப்பட்டதல்ல வாஞ்சிநாதனின் கடிதம். தன்னொத்த சாதியவாதிகளைத் தூண்டிவிடுவதற்கு வாஞ்சிநாதன் விடுத்த அறைகூவலாகவும் ஆஷ் போன்ற அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவுமே அக்கடிதத்தை கருத வேண்டியுள்ளது. அக்கடிதத்தின் ஒவ்வொரு சொல்லையும் சொற்களுக்கிடையேயான இடைவெளியையும் அன்றைய காலத்தில் அவற்றுக்கிருந்த மெய்யான பொருளையும் விளக்கிச் செல்லும் ஆசிரியர், வாஞ்சிநாதன் ஆஷைக் கொன்றது அரசியல் காரணங்களுக்காக அல்ல என்றும் சொந்தப்பகையின் - அதாவது சாதிவெறியினாலேயே கொன்றார் என்றும் நிறுவுகிறார். விதிவிலக்காக சில வெள்ளையதிகாரிகளும் மத போதகர்களும் ஒடுக்கப்பட்ட மக்களின் பால் காட்டுகிற கரிசனத்தை காணப்பொறுக்காத ஆத்திரம் கொப்பளிக்க எழுதப்பட்ட அக்கடிதத்தை திரித்து அதற்கு தேசபக்த முலாம் பூசப்படும் மோசடியை இந்நூல் தன்போக்கில் அம்பலப்படுத்துகிறது. சுதந்திரப் போராட்டத்திற்கு சுண்டுவிரலைக்கூட அசைத்திராத கூட்டம் இந்த நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றி ஆரிய சனாதனத்தை மீண்டும் கொண்டுவரப் போவதாக கொக்கரித்து வரும் இந்நாளில், வாஞ்சிநாதன் போற்றும் ஆரியர்கள் யார், அவர்கள் கைக்கொண்டிருந்த தர்மம் எத்தகையது, அழியாத சனாதனம் என்பதன் மனிதாயமற்றத்தன்மை, வேதப்பண்பாட்டின் கீழ்மைகள் ஆகியவற்றை மிக விரிவாக விளக்கும் இந்நூல் அரசியல் முக்கியத்துவமுடையதாகிறது. - ஆதவன் தீட்சண்யா