திரு.வி.க.வாழ்க்கைக் குறிப்பு - 1
திரு.வி.க.வாழ்க்கைக் குறிப்பு - 1
திரு. வி. கலியாணசுந்தரனார் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்து எளிய வாழ்வே வாழ்ந்தவர். பிறப்பும் வாழ்வும் எளிமையாக இருந்தபோதிலும், அவர்தம் எழுத்திலும் சொல்லிலும் செயலிலும் பெருமை பல் விளங்கின. அவர் இணையற்ற எழுத்தாளர்: கேட்டார்ப் பிணிக்கும் பேச்சாளர் அறநெறி பிறழாச் செயலாளர், இதழ் ஆசிரியராகவும் நூலாசிரியராகவும் விளங்கி அவர் தமிழ் மொழிக்குச் சிறந்த எழுத்துப்பணி புரிந்துள்ளார்; அவருடைய எழுத்துக்கள் இளைஞரின் உள்ளங்களைக் கவர்ந்து, அவர்களின் வாழ்க்கைத் துலக்கியது. அவர்தம் தமிழ்நடை பீடும் பெருமிதமும் வாய்ந்தது. பேச்சுத் துறையிலும் அவர் ஆற்றிய தொண்டு அளப்பரிது. அவர் சென்று பேசாத ஊர் இல்லை; ஏறாத மேடை இல்லை எனலாம். சமயம், இலக்கியம், அரசியல், சமுதாயச் சீர்திருத்தம் முதலான எல்லாத் துறையும் அவர்தம் பேச்சுத் தொண்டால் பயன் பெற்றன.