ராகுல்ஜியின் சுயசரிதை
ராகுல்ஜி என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் ராகுல் சாங்கிருத்யாயன் (1893-1963) இந்தியாவின் மகாப் பண்டிதர்களுள் ஒருவர்; பொதுவுடைமைக் கொள்கைக்காரர்; பௌத்தத் தத்துவத்தின் மீது ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். சமஸ்கிருதம், பாலி, அரபி, உருது முதலான பன்மொழிகளில் ஆழ்ந்த பயிற்சி பெற்றவர். பல பௌத்தத் தத்துவ நூல்களைப் பதிப்பித்துள்ளார்; விளக்கவுரை எழுதியுள்ளார்.
அகராதிகளைத் தொகுத்துள்ளார். சமூக வரலாற்று ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். இலக்கிய வரலாறுகளை எழுதியுள்ளார். தத்துவ நூல்களைப் படைத்துள்ளார். பொதுவுடைமைக் கொள்கைகளைப் பரப்பப் பல நூல்களை எழுதியுள்ளார். புனைவு எழுத்துகளை படைப்பதிலும் வல்லமை பெற்றவர். இவரது வால்கா முதல் கங்கை வரை என்ற சமூக வரலாற்றுப் புனைவு எழுத்து உலக அளவில் மிகவும் புகழ்பெற்றது. ராகுல்ஜியின் அறிவு விசாலக் கடலின் கரையைக் காணவே முடியாது.
ராகுல்ஜி சிறுவயதிலேயே வீட்டைவிட்டு வெளியே ஊர் சுற்றக் கிளம்பியதிலிருந்து அவரது வாழ்நாள் முழுவதுமான அவரது பயணங்களும் அனுபவம், படிப்பு, ஆய்வு, எழுத்து, தேடல் என அனைத்து வாழ்நிலைளும் இந்நூலில் தன்வரலாறாக எழுதப்பட்டுள்ளது.
இந்தியாவில் காசி, திருப்பதி, உஜ்ஜயினி, காஞ்சிபுரம், பெங்களூர், விஜயநகரம், அகமதாபாத், ஆக்ரா, லாகூர், குடகு போன்ற பல இடங்களுக்கும் பயணம் மேற்கொண்டதோடு நேபாளம், இலங்கை, திபெத், பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, சோவியத் ரஷ்யா, ஜப்பான், கொரியா, ஈரான், சீனா உள்ளிட்ட பல வெளிநாடுகளுக்கும் சென்று அவர் கண்டடைந்த அனுபவங்கள் வாசிப்பவர்களை மெய்சிலிர்க்க வைப்பவை.
'சதா திரிந்து கொண்டேயிருக்கவேண்டும்' என்ற சிந்தை கொண்டிருந்த ராகுல்ஜி தன் அனுபவங்களை 'மேரி ஜீவன் யாத்ரா' என்று இந்தியில் எழுதியவை தமிழில் தற்போது இரண்டு பாகங்களாக வெளிவந்துள்ளன.
தொடர்புடைய மற்ற பதிவுகள்:
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.