தமிழக வரலாற்றில் ஊரும் சேரியும்:Bhakthavatsala Bharathi
மானுட வரலாற்றில் எழுதப்பட்டவைகள் தவிர்த்து இன்னும் எழுதப்படாத வரலாற்றுச் செய்திகள் எண்ணற்றுக் கிடக்கின்றன. தமிழர் வரலாற்றிலும் தமிழ் இலக்கிய வரலாற்றிலும் கூட இன்னும் எழுதப்படாத வரலாற்றுச் செய்திகள் நிறையவே இருக்கின்றன. அப்படி எழுதப்பட்ட வரலாற்றில் இந்நூலை அரிதான ஒன்றாகத்தான் பார்க்கிறேன். சமீபகாலமாகத்தான் தமிழர்களின் தொன்மை வரலாற்றைத் தமிழர்களே, சரி என்று ஏற்றுக் கொள்கிற காலம் வந்து கொண்டிருக்கிறது. அண்மைக்கால புதிய கண்டுபிடிப்புகள், ஆய்வுகள், அறிவியல் வளர்ச்சி, நவீன தகவல் தொடர்பு சாதனங்கள், தொடர் முயற்சிகள் போன்றவைகளால் இது சாத்தியமாகியிருக்கிறது. இவ்வகையில் கீழடி அகழ்வாராய்ச்சி தமிழர்களின் மத்தியில் ஒரு பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது இந்நூலும் வருந்தலை முறைக்கும், தற்கால தமிழர் வரலாற்று ஆய்வாளர்களுக்கும் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.
உலக நாகரிகங்களுள் தமிழர் நாகரிகமும், தமிழர் மொழியும், தமிழ் இலக்கியங்களும் மிகப் பழமையானவை என்பது பொதுவாக எல்லோரும் அறிந்ததே. ஆனால் எப்படி என்ற கேள்விக்கு பரவலான பதில், ” கல் தோன்றி மண் தோன்றா காலத்தே” என்ற புறப்பொருள் வெண்பாமாலை பாடலைத்தான் பதிலாக சொல்லத் தெரிகிறது. ஆனால் தகுதியான சரியான ஆய்வின் அடிப்படையில் தமிழர் வரலாற்றை நிறுவும் முயற்சியில் இந்நூல் வெற்றி பெற்றிருக்கிறது எனலாம்.
பல நூல்களின் ஆசிரியரான எழுத்தாளர் பக்தவச்சல பாரதி அவர்களால் எழுதப்பட்டு; தமிழகத்தின் பதிப்புத்துறையில் முன்னிலையில் இருக்கும் பாரதி புத்தகாலயத்தால் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது மகிழ்ச்சிக்குரியது.
தமிழர் வரலாற்றை எப்போதும் சங்க இலக்கியங்களில் இருந்தே தொடங்கிப் பழகிய நமக்கு; ஆறுதலாய் தமிழர்களின் வரலாற்றுக் காலத்தை இன்னும் முன்னோக்கி எடுத்துச் சென்று சிந்துவெளி காலம் தொடங்கி தற்காலம் வரையிலான தமிழர் வரலாற்றை ஆழமான, நுணுக்கமான செய்திகளோடு இந்நூலை நிறைவு செய்திருப்பது மகிழ்ச்சிக்குரியதே.
இந்நூலின் பெயரைக் கேட்கும்போதே சற்று நிதானிக்கச் செய்கிறார் இந்நூலாசிரியர். ஆம், தமிழறிஞர் திரு.ரா.பி.சேதுப்பிள்ளை அவர்களை நமக்கு நினைவூட்டி அவர் எழுதிய, ‘ஊரும் பேரும் ‘என்ற மிகச் சிறப்பான நூலை நம் நினைவிற்கு கொண்டு வந்து போகிறார்.