கால்டுவெல் ஐயர் சரிதம்
மொழிநூற் புலமை வாய்ந்த கால்டுவெல் ஐயர் பத்தொன்பதாம்
நூற்றாண்டில் தமிழகத்திற் சமயத் தொண்டு புரியப் போந்தார்.
அத்தொண்டு சிறக்கும் வண்ணம் ஐயர் தமிழ் மொழி பயின்றபோது
அம்மொழியின் நீர்மை அவர் உள்ளத்தைக் கவர்ந்தது; தென்
மொழியாய தமிழொடு தென்னிந்தியாவில் வழங்கும் பிற மொழிகளை
ஒத்து நோக்கித் ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்னும்
உயரிய நூலை ஆங்கிலத்தில் இயற்றினார். அந்நூல் திராவிட
மொழிகளுக்குப் புத்துயிர் அளித்ததென்றும் கூறுதல் மிகையாகாது.கால்டுவெல் ஐயர் தமிழகத்தையே தாயகமாகக் கொண்டார்;தென் தமிழ் நாடாய பொருனை நாட்டில் *ஐம்பதாண்டுக்கு மேலாகவதிந்து அருந்தொண்டாற்றினார். ஏழை மாந்தர்க்கு எழுத்தறிவித்தார்;
சமய ஒழுக்கத்தைப் பேணக் கருதிக் திருச்சபைகள் நிறுவினார்;
தூர்ந்து கிடந்த துறைகளைத் துருவினார்; திருநெல்வேலிச்
சரித்திரத்தை வரன் முறையாக எழுதி உதவினார்