பல்வங்கர் பலூ
பல்வங்கர் பலூ - E.P.Chinthan
கிரிக்கெட் என்றால் என்ன?”
“அது ஒரு விளையாட்டு.”
“ம்ஹூம்... கிரிக்கெட் என்றால் என்ன?”
“ஓர் அணியில் 11 பேர் ஆடும் ஆட்டம்.”
“இல்ல... கிரிக்கெட் என்றால் என்ன?”
“கிரிக்கெட் என்றாலே சச்சின்... கிரிக்கெட்டின் கடவுள் அவர்.”
“நோ... கிரிக்கெட் என்றால் என்ன?”
“ஆமா, சச்சின் எடுத்த ரன்களை வேற யாராலும் எடுக்க முடியாது.”
“வேற... கிரிக்கெட் என்றால் என்ன?”
“நம்ம தல தோனி... இரண்டு உலகக் கோப்பை வாங்கித் தந்தாரு.”
“சரி... சரி... கிரிக்கெட் என்றால் என்ன?”
“யுவராஜ் சிங்... ஒரே ஓவரில் ஆறு சிக்ஸ்... இப்ப ருத்ராஜ் அதை முறியடிச்சிட்டாரே!”
“ஓஹோ... கிரிக்கெட் என்றால் என்ன?”
“நீ வேற மாதிரி கேட்கிறியா... கிரிக்கெட் என்றாலே வணிகம்... வியாபாரம், அப்படியா?”
“ம்ஹூம்... கிரிக்கெட் என்றால் என்ன?”
“அட போப்பா... என்ன சொன்னாலும் இதையே கேட்கிற!”
ஒரு நண்பரோடு நடந்த உரையாடல்தான் இது. நமக்கு கிரிக்கெட் என்றால், அதில் ஆடும் வீரர்களின் பெயர்களும் அவர்களின் சாதனைகளும்தான் தெரிகிறது. அதுவும் முழுதாகத் தெரிகிறதா என்று கேட்டால் இல்லை. ஆமாம். கபில்தேவ், கவாஸ்கர், சச்சின், கங்குலி, டிராவிட், தோனி, கோலி போன்றவர்கள் பெயர்கள் மட்டுமே தெரிந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மறைக்கப்பட்ட வீரர்கள் பற்றித் தெரியுமா? அப்படி மறைத்ததற்கு என்ன காரணம் தெரியுமா? இதுவரை தெரிந்துகொள்ளவில்லையா... அப்படி என்றால் நிச்சயமாக நான் சொல்கிறேன், சிந்தன் எழுதிய ‘பல்வங்கர் பலூ’ நூல், உங்களின் கிரிக்கெட் பற்றிய புரிதலை மாற்றி அமைக்கப் போகிறது.
கிரிக்கெட் எனும் விளையாட்டு எப்படித் தோன்றியது என்று வழக்கமான வரலாற்று நூலைப் போலத் தொடங்கும் இந்த நூல், பல்வங்கர் பலூ எனும் நாயகன் வந்த பிறகு சூடு பிடிக்கத் தொடங்குகிறது. பரபரப்பான கதை உள்ள நாவலைப் படிப்பது போல எழுதியிருக்கிறார் சிந்தன்.
இந்த நாவல் மூன்று விதங்களில் உங்களுக்குப் பிடிக்கும். ஒன்று, கிரிக்கெட்டில் நீங்கள் இதுவரை கேள்வியே பட்டிராத ஒரு வீரரைப் பற்றிய அற்புதமான வரலாற்றைத் தெரிந்துகொள்ளப் போகிறீர்கள்.
இரண்டு, ஆங்கிலேயர் நம் நாட்டை ஆட்சி செய்தபோது எப்படி இருந்தது நிலைமை, நம்மை எப்படி நடத்தினார்கள், நாம் விளையாடக்கூட அவர்களிடம் அனுமதி பெறும் சூழல் இருந்தது உள்ளிட்ட அதிர்ச்சியான உண்மைகளைத் தெரிந்துகொள்வீர்கள்.
மூன்று, ஆங்கிலேயரிடம் இந்தியர்கள் அடிமைப்பட்டு இருந்தனர். ஆனால், இந்தியர்களில் ஒரு பிரிவினரை அடிமைப்படுத்தி வைத்திருந்தனர். ஆங்கிலேயர் விளையாட அனுமதி கொடுத்தாலும், அந்தப் பிரிவினரை விளையாட்டில் சேர்த்துக்கொள்ளாமல் புறக்கணித்தனர். அவர்கள் யார், எதனால் புறக்கணிக்கப்பட்டனர் என்பதெல்லாம் நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.
மறைக்கப்பட்ட உண்மைகளைத் தேடிக் கண்டுபிடித்து அடுத்த தலைமுறைக்குக் கொடுப்பதுதான் ஆகச் சிறந்த பணி. அதை இ.பா.சிந்தன் நேர்மையாகச் செய்துள்ளார். அதற்காக உங்களின் பாராட்டுகளைத் தெரிவித்துவிட்டு, உங்கள் சிந்தனையைப் புரட்டிப் போடக்கூடிய பல்வங்கர் பலூவின் கதையைப் படிக்கத் தொடங்குங்கள்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.