மாநில சுயாட்சி - முரசொலி மாறன்
தங்கள் திட்டங்களுக்கு நிதி கேட்டோ, இயற்கைச் சீற்றங்களுக்கு நிவாரணம் கேட்டோ மத்திய அரசுக்கு கடிதம் எழுதி சலித்துப் போகும் மாநில அரசுகள், ‘மாநிலங்களுக்கு இன்னும் உரிமை வேண்டும்’ என போர்க்கொடி பிடிப்பது, சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து இந்தியாவில் நடந்துவரும் விஷயம். மத்திய அரசு பல விஷயங்களை தனது அதிகாரத்தில் வைத்திருக்கிறது; மாநில அரசுக்கு சில விஷயங்களில் அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது; இன்னும் சில விஷயங்கள் இரண்டு அரசுகளின் அதிகார வரம்பிலும் வருகின்றன. இதில் அவ்வப்போது உரசல்கள் வருவது இயல்பு. மாநிலங்களுக்கு உரிமைகள் வழங்குவது பற்றி அடிக்கடி கமிஷன்களும் அமைக்கப்பட்டுள்ளன. பல நாடுகளில் மாகாண அரசுகளுக்கு அதிக அதிகாரங்கள் உண்டு. அதுபோல் இந்தியாவிலும் ஏன் சுயாட்சி அவசியம் என்பதற்கான ஆவணமாக இருக்கிறது இந்த நூல். தி.மு.க.வின் மூத்த தலைவரான முரசொலி மாறன் இந்த நூல் குறித்து முன்னுரையில் இப்படிச் சொல்கிறார்: ‘மாநில சுயாட்சிக் கோரிக்கை மட்டுமல்லாது, இன்றைய மத்திய-மாநில உறவுகளின் பல கூறுகளும் இதில் விவாதிக்கப்பட்டிருக்கின்றன. உலகத்தில் இதுவரை எழுதப்பட்ட அரசியல் சட்டங்களிலேயே மிகவும் பெரியது, நம்முடையது. எனவே, அதன் சகல அம்சங்களையும் புரிந்துகொண்டால்தான் நமது விவாதத்தை உணர்ச்சிபூர்வமாக மட்டுமல்ல, அறிவார்ந்த வகையிலும் அணுக முடியும். இதில் கூறப்பட்டிருக்கிற அனைத்தும் எனது கண்டுபிடிப்புகள் அல்ல; இதுவரை பல அறிஞர் பெருமக்கள் உதிர்த்திருக்கிற முத்தான கருத்துக்கள் நமது வாதத்திற்கு வலுவேற்றும் வகையில் தொகுத்துக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதுபோன்ற புத்தகத்திற்கு மூலதனமே அத்தகைய ஆதாரங்களைத் தேடித் திரட்டுவதுதான்! அதற்குத்தான் அதிக காலம் ஆயிற்று. இந்தத் தலைப்பில் கூறப்பட வேண்டியதெல்லாம் இவ்வளவு தானா? என்று கேட்டு விடாதீர்கள். ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்‘ - என்னும் தமிழுரைக்கேற்ப, எனக்குத் தெரிந்ததை என் அருமைத் தோழர்களுக்கும் தெரிவிக்க முயன்றிருக்கிறேன்; அவ்வளவுதான்! இதுகுறித்து நாம் மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் நிறைய இருக்கின்றன.’ ‘இப்படி ஒரு பெரியவர் - உங்களால் மதிக்கப்படுகிறவர்-சொல்லியிருக்கிறார்’ என்றால் அதை ஊன்றிக் கவனிக்க மாட்டார்களா, என்கிற ஆசை காரணமாக, பலரது மேற்கோள்களை எடுத்துக்காட்ட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இதனால் வாசகர்களின் கவனத்தைக் கீழே இழுக்கும் அடிக் குறிப்புகள் இந்நூலில் பெருகியிருக்கின்றன. சில கருத்துக்கள் அடிக்கடி திரும்பச் சொல்லப்பட்டிருந்தால் அதற்குக் காரணம் அதை நன்கு வலியுறுத்த வேண்டுமென்கிற நோக்கம்தான்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.