பெரியாரின் தன் வரலாறு
பெரியாரின் தன் வரலாறு - பெரியார்
பெரியார் ஈ.வெ.ரா. அவர்களைப் பற்றி அறியாதவர்கள் எவரும் இலர். ஒவ்வொரு துறையிலும் அவர் மிக முற்போக்கான கருத்துடையவர். மதத்துறையில் அவர் கருத்து மிக முற்போக்குடையது. எல்லா மதங்களும் ஒழிந்து தீர வேண்டும். மதம் மக்களுடைய அறிவைத் தடைப்படுத்தக் கூடாது. உரிமையைப் பறிமுதல் செய்யக் கூடாது. மதத்தின் மூலம் ஒருவரை ஒருவர் ஏமாற்றுவதற்கு இடமிருக்கக் கூடாது. மக்களனைவரும் ஒன்றென்னும் உண்மை நிலவ வேண்டும். இவை வாயளவில் அல்லது நூலளவில் இருத்தல் போதாது. நடைமுறையில் இருக்க வேண்டும். இக்கொள்கைகளுக்கு ஆதரவு தருவது மதமாயினும் சரி, அல்லது அரசியலாயினும் சரி, அல்லது வேறு எதுவாயினும் சரி, அவைகளை வரவேற்க வேண்டும். இக்கருத்து பெரியாருக்கு உண்டு. தன் மதத்தில் வெறியும், பிற மதத்தில் வெறுப்பும் உடையவர்களுக்கு இக்கொள்கை நஞ்சாக இருக்கும். ஆதலால், பெரியாரை மதத்துரோகி என்றும், நாத்திகர் என்றும் தூற்றுவோர் ஒரு சிலர்.
இவரைப் பற்றி பகைவர்கள், 'கொள்கை இல்லாதவர்; கொள்கையை விட்டுக் கொடுப்பவர்; கட்சி மாறுகிறவர்; கட்சியைக் காட்டிக் கொடுப்பவர்; என்றெல்லாம் பழி கூறுவர். இப்பழி ஆதாரமற்ற பொறாமைப் பேச்சு; இவருடைய பொதுஜன செல்வாக்கைக் குறைக்கும் கேடு நினைப்புடன் கூறும் கூற்று. இவர் கட்சி மாறியிருப்பதும் உண்மை . காங்கிரசிலிருந்து மாறினார். ஏன்? அதன் போக்கு தன் கொள்கைக்கு மாறாகவிருந்தது. தன் கொள்கைக்கு காங்கிரசைத் திருப்ப முயன்றார்; முடியவில்லை. அதனால், அதை விட்டு விலகினார். இதுவே இவருடைய கொள்கையில் இவருக்குள்ள உறுதியான பிடிப்பைக் காட்டுவதாகும்.
இன்று பெரியார் தமிழர் தலைவராக விளங்குகின்றார். சில ஆண்டுகளுக்கு முன் இவரைத் தூற்றியவர்களும் இன்று போற்றுகின்றனர். தமிழ்மக்கள் இவர் சொற்கள் ஒவ்வொன்றையும் தங்கள் வாழ்க்கையை உயர்த்தும் செல்வங்கள் என்று கருதுகின்றனர்.
இத்தகைய பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை அறிய ஆவல் கொள்வது எவர்க்கும் இயல்பு. அறிய வேண்டுவதும் அவசியம். இவர் ஏன் ஒரு மதப் புரட்சிக்காரராக இருக்க வேண்டும்? இப்புரட்சிகளை இவர் விரும்புவதற்குக் காரணம் என்ன? என்பவைகளை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
இதில், பெரியாரது பிறப்பு முதல் இன்று வரையிலும் உள்ள வரலாறு குறிப்பிடப்பட்டுள்ளது. பெரியாரின் பெற்றோர் வரலாறு, அவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்ற விதம், இவருடைய இளமைப் பருவ குறும்புகள், வாலிப விளையாட்டு, குடும்ப வாழ்வு, பெரியாரின் வாழ்க்கைத் துணைவியார் வரலாறு, பெரியாரின் துறவுக்கோலம், பொது வாழ்வு, பொது வாழ்வில் வெற்றி பெற்றதற்கான காரணங்கள், அரசியல் வாழ்வு, பிற நாட்டுச் சுற்றுப் பிரயாணங்கள், கொள்கையை நிறைவேற்றுவதில் இவருக்குள்ள உறுதி, அஞ்சாத தன்மை, இடைவிடாத உழைப்பு, பகைவர்களால் இவருக்கு நேர்ந்த துன்பங்கள், இவர் சிறைப்பட காரணங்கள் ஆகிய எல்லாச் செய்திகளும் இவ்வரலாற்றில் எழுதப்பட்டுள்ளன.
இவர் வரலாறு படிக்க சுவை பயக்க கூடியது. இதில் வியக்கத்தக்க நிகழ்ச்சிகள் பல; துக்கித்தக்க நிகழ்ச்சிகள் பல; நகைக்கத்தக்க நிகழ்ச்சிகள் பல பொதிந்துள்ளன. இதில் குறிக்கப் பெற்றுள்ள நிகழ்ச்சிகள் முற்றும் உண்மையானவை.
தமிழ் மக்கள் அனைவரும் இப்புத்தகத்தைப் படித்து பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை உணர்ந்து, ஒவ்வொருவரும் அவரைப் போன்ற புரட்சி மனப்பான்மை படைத்தவராக வேண்டு மென்பதே எனது ஆவல். அதற்கு இவ்வரலாறு உதவி செய்யும் என்று நம்புகிறேன். எனது நம்பிக்கை வீணாகாதென்பது உறுதி.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.