டாக்டர்.கோவூரின் பகுத்தறிவுப் பாடங்கள்
டாக்டர் கோவூர் மறைந்து விட்டார். ஆயினும் அவர் கொண்ட கொள்கையின் காரணமாக பன்னூறு ஆண்டுகள் வாழ்வார் என்பது திண்ணம். மனிதனின் மாறும் உலகைப் பற்றிய அறிவியலறிவு உலகந்தழுவிய அறியாமையையும், மூடநம்பிக்கையையும் எதிர்த்து வெற்றிபெறும் என்பதில் அய்யமில்லை. பணத்திற்காகப் பாமரமக்களை ஏமாற்றிப் பிழைக்கும் எத்தர்களை டாக்டர் கோவூர் சிறிதும் பொறுத்துக் கொள்ள மாட்டார். அவர் போராட்டம் எப்பொழுதும் இத்தகைய மோசடிக்காரர்களை எதிர்த்தே வந்துள்ளது. இவ்வகையில் அவர் ஓர் அறிவார்ந்த சமுதாய உணர்வு மிக்க நேர்மையாளராகவே வாழ்ந்து வந்துள்ளார்.
எம்.ஜி.ஆர். உடல்நலம் இல்லாமல் இருந்தபோது, அவர் குணம் அடையவேண்டி விசேஷப் பூஜைகள் நடத்த காஞ்சி சங்கராச்சாரியார் ஏற்பாடு செய்திருந்தார். முதலமைச்சர் எம்.ஜி.ஆர். 9.3.85 மாலை காஞ்சிபுரம் வந்து சங்கராச்சாரியாரைச் சந்தித்தார். மாலை 5.40 மணிக்கு எம்.ஜி.ஆர் காஞ்சிபுரத்தில் உள்ள சங்கரமடத்துக்குக் காரில் வந்தார். அவருடன் மனைவி ஜானகி அம்மாளும் வந்தார். சந்திரசேகரேந்திர சரஸ்வதி சாமிகள், ஜெயேந்திர சரஸ்வதி சாமிகள், சங்கரவிஜயேந்திர சரஸ்வதி சாமிகள் ஆகிய 3 சங்கராச்சாரிகளையும் எம்.ஜி.ஆர். சந்தித்து வணங்கினார். ''உங்கள் ஆசீர்வாதத்தினால் நான் மீண்டும் உயிர்பெற்று வந்து உங்களைச் சந்திக்கும் பாக்கியம் பெற்றேன்" என்று எம்.ஜி.ஆர். அந்த சங்கராச்சாரியாரிடம் கூறினார்.