திருநம்பியும் திருநங்கையும்
ஒருவர் ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறுவதும் பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறுவதும் நேற்று, இன்று நிகழ்ந்தவையல்ல. பரிணாம வளர்ச்சியில் மனித இனம் பல்வேறு மாற்றங்களுக்கு உள்பட்டது எவ்வளவு அறிவியல்பூர்வமானதோ அதைப் போன்றதுதான் திருநர் உடலில் நிகழும் மாற்றங்களும். தங்கள் அறிவுக்குப் புலப்படாத எதையுமே அச்சப்பட்டு ஒதுக்கிவைப்பது மனிதர்களின் இயல்பு. ஆரம்பத்தில் திருநர் சமூகத்தையும் இந்த உலகம் அப்படித்தான் அணுகியது. பேய் பிடித்துவிட்டது என்றும் மனநலக் குறைபாடு என்றும் தவறாகப் புரிந்துகொண்டு பலர் வினையாற்றியிருக்கிறார்கள். தங்களது உடல் - உள மாறுதல்களை இந்தச் சமூகத்துக்குப் புரிய வைக்க முடியாமல் அடையாளமின்றி அழிந்த திருநர்கள் ஏராளம். ஆனால், இன்றைக்கு நிலைமை மாறியிருக்கிறது. ஆண் பால், பெண் பால் போலவே திருநர்களை மூன்றாம் பாலினமாக அரசு அங்கீகரித்துள்ளது.