மார்க்சியமும் பெரியாரும்
"உழைப்பாளி மக்கள் உடல் வருத்தி உழைத்த பின்னும், குடிக்கக் கூழ் இன்றியும், கட்டக் கந்தையின்றியும் பரிதவிக்கும்போது, எவ்வித வேலையும் செய்யாது பணக்காரனாகத் தொழிலாளியைக் கொடுமைப்படுத்திக் கொண்டு, டம்பாச்சாரித்தனமாக வாழ்வது சரியல்ல (விடுதலை, 08.10.1973). “பெரியார் பல சமயங்களில் மார்க்சியர்களைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார். ஆனால் ஒருமுறைகூட மார்க்சியத்தைக் குறைகூறவில்லை” என்று தம்முடைய முன்னுரையில் குறிப்பிடுகிறார், இந்நூலின் ஆசிரியர் கொளத்தூர் மணி அவர்கள். பெரியாரின் கொள்கைகளில் சாதி ஒழிப்பு, பெண்ணடிமைத்தன எதிர்ப்பு ஆகியவற்றோடு பொதுவுடைமைக் கொள்கையும் இருந்தது என்ற வரிசைப்படுத்துதலோடு தொடங்கும் இந்நூலில், பெரியாரின் பொதுவுடைமைக் கருத்துகள், செயல்பாடுகள் ஆகியவை குறித்து அறியாத பல செய்திகள் இடம்பெற்றுள்ளன. இந்திய மொழிகளில் வெளிவருவதற்கு முன்பே ஆங்கிலத்தில் இருந்த கம்யூனிஸ்ட் அறிக்கையைத் தமிழில் ‘சமதர்ம அறிக்கை’ என்ற பெயரில் தமிழில் வெளியிட்டது; இங்கிலாந்தில் தொழிற்கட்சி நடத்திய மாநாட்டிலேயே போய் அக்கட்சியை விமர்சித்துப் பேசியது என்பன போன்ற செய்திகள் பலரும் அறியாதது. பாரதியார் பாட்டுப் பாடினார், ‘பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்’ என்று. யார் மொழிபெயர்த்தார்களோ இல்லையோ, பெரியார்தான் மொழிபெயர்த்துக் கொண்டே வந்தார் – லெனிமும் மதமும், பகத்சிங், நான் ஏன் கிறிஸ்துவனில்லை (பெர்ட்ரண்ட் ரசல்) இப்படிப் பல மொழிபெயர்ப்புகள் (நூலின் பக்கம் 62). 1972-ஆம் ஆண்டு உறையூரில் ஒரு கூட்டம் நடக்கிறது. அந்தக் கூட்டத்திற்குப் பெரியார் வைத்த தலைப்பே “கம்யூனிசம்தான்” (நூலின் பக்கம் 65). “நீங்கள் மூலதனம் போடும் முதலாளித்துவத்தைப் பற்றித்தான் பேசுகின்றீர்களே தவிர, பிறவி முதலாளித்துவத்தைப் பற்றி நீங்கள் பேச மறுக்கிறீர்கள்” என்பதே பெரியார் கம்யூனிஸ்ட்டுகள் மீது வைத்த விமர்சனம் (நூலின் பக்கம் 67).