கலைஞரின் புதையல்
கலைஞரின் புதையல் ( Kalaignarin puthayal) இரவு நேரங்களிலே நிலவைக் காண முடியாத இருள் வேளைகளிலே கையிலே மண்வெட்டி கொண்டு எத்தனை எத்தனை ஆசைக்காரர்கள் தாங்கள் பூவைத்துப் பார்த்து உத்தேசமாக உறுதிப்படுத்திக் கொண்ட பகுதியிலே தோண்டிப் பார்த்து பொன் குடங்களைக் காணாமல் ஏமாந்திருக்கிறார்களோ யார் கண்டது? இப்படிப் பலருக்கு ஆசை காட்டியும் பலரை ஏமாற்றியும்பலரால் சிறப்பிக்கப்பட்டும்சிரமத்தைச் சுமந்து தோற்று விட்ட சிலரால் சபிக்கப்பட்டும்- தனித் தன்மை பெற்றுவிட்ட அந்த மருங்கப்பள்ளம் காண்பதற்கு அழகான ஊர். சிறியதோர் சாலை அதன் ஓரத்திலே வயலுக்கு உயிர் வழங்கும் வாய்க்கால். அந்த வாய்க்காலின் கரைகளிலே புறாக்கூடு போன்ற ஓலைக் குடிசைகள். பச்சைப்பட்டாடை விரித்து இயற்கையன்னை எழில் கொட்டி மகிழ்வூட்டும் பூமி, அந்த மருங்கப்பள்ளம் பிரச்சினைக்குரிய பிரதேசம்...