நீதிக்கட்சி வரலாறு
நமது இயக்கம் தற்காப்பு இயக்கமே. நமது சமூக சேமத்தைக் காப்பதே நமது நோக்கம். நமது இயக்கத்தில் பலாத்காரம் துளிக்கூட இல்லை. எப்பொழுதேனும் நாம் எதிரிகளைத் தாக்கியிருந்தால், தாக்குதலே சரியான பாதுகாப்பு முறை என்ற இராணுவ முறைப்படியேயாகும். தென்னிந்திய மகாஜன சங்கமும், தென்னிந்திய நல உரிமைச் சங்கமும், பிராமணரல்லாதாருக்குள்ளே எழுச்சியை உண்டு பண்ணிவிட்டன. பிராமணரல்லாதாரும் தமது உரிமைகளைச் சரிவர உணர்ந்து விட்டனர். நாம் பிராமண ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற முயல்வதற்குப் பிரிட்டிஷ் அரசாங்கமே காரணமாகும். வருணாச்சிரம தர்மத்துக்கு இனி ஒருபொழுதும் நாம் அடிமைப்படமாட்டோம். இந்த அனுக்கிரங்களுக்காகப் பிரிட்டிஷாருக்கு நன்றி செலுத்த நாம் கடமைப்பட்டிருக்கிறோம். ஆனால், துரதிர்ஷ்ட வசமாக நமக்கு எதிர்பாராத புது நிலைமை ஏற்பட்டிருக்கிறது. சர்க்கார் நமக்கு வாக்குரிமையளித்த பிறகு சர்வீசில் பிராமணர்கள் அமோகமாக ஆதிக்கம் பெற்றிருப்பதனாலும், பிராமணரல்லாதார் போதுமான அளவு கல்விப் பயிற்சி பெறாததனாலும், வாக்குரிமை சரியாகப் பிரயோகம் செய்யப்படாததை நாம் காண்கிறோம். சர்க்கார் உத்தியோகஸ்தர்களுக்கு மிகுந்த செல்வாக்கு இருந்துவரும் இந்நாட்டில், ஒரு வகுப்பாரே உத்தியோக மண்டலத்தில் ஆதிக்கம் பெற்றிருப்பதனால், அவ்வகுப்பாருக்கே அதிகமான செல்வாக்கும் மதிப்பும் ஏற்பட்டு வருகிறது. பொது ஸ்தாபனங்களிலும் உத்தியோக மண்டலத்திலும் பிராமணர்களுக்கும் அல்லாதாருக்கும் இருந்துவரும் அசமத்துவ நிலை நீங்காத வரை, பிராமணரல்லாதார் ஜனத்தொகையில் மிகுந்திருந்தாலும், வாக்குரிமையினால் அவர்களுக்கு அதிகப்பலன் ஏற்படாது.