சிந்தனையாளர் மாக்கியவெல்லி
உலகம் தோன்றிய நாள் முதல் எத்தனையோ அரசுகள் தோன்றி வளர்ந்து ஆட்சி செய்துள்ளன. எனினும் எந்த அரசும் நிலைபெற்ற அரசாக இல்லை. அவ்வப்போது ஏற்படும் ஆட்சி மாற்றங்களால் மக்கள் சீர்குலைவுக்குட்பட்டனர். இத்தகைய சூழ்நிலையில்தான் அரசுகள் ஏன் நிலையாக இருப்பதில்லை என்பது பற்றிச் சிந்திக்க இத்தாலியில் ஓர் இளைஞன் தோன்றி அதற்கான வழிமுறைகளைப் பற்றிச் சிந்தித்தான். அவன் தான் மாக்கியவெல்லி என்னும் மகாவறிஞன். உயிர்களைப் பலிகொடுத்தேனும் நிலையான அரசை ஏற்படுத்த வேண்டும் என்று சிந்தித்தான். அதனை உலகிற்கு வெளிப்படுத்தினான். பிரச்சினைக்குரிய சிந்தனைகள் என்று ஒருகாலத்தில் நினைக்கப்பட்டவை அனைவரையும் சிந்திக்க வைத்தன. செயல்பட வைத்தன. அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன. அவனுடைய புகழ் உலகெங்கும் பரவியது. அவனுடைய வரலாற்றினைத் தொகுத்து எழுதப்பட்ட நூலே சிந்தனையாளர் மாக்கியவெல்லி என்னும் இந்நூல்.
இந்நூல் மாக்கியவெல்லியின் வரலாறு, அவன் எழுதிய நூல்களின் சுருக்கங்கள், அவனுடைய மணிமொழிகள் என மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளன. இத்தகைய சிறந்த நூலை எழுத்தாளராகக், கவிஞராக, பல்திற வித்தகராக விளங்கிய நாரா நாச்சியப்பன் என்பவர் அழகு தமிழில் தெளிவுபெற சிந்தனைச் சிதறலின்றி செம்மைப்படுத்தி எழுதியுள்ளார்.