இதுதான் திராவிட நாடு
இதுதான் திராவிட நாடு' என்னும் இந்நூல் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் எழுதிய நுட்பமும் திட்பமும் நிறைந்த நூல். ஆய்வாளர்களுக்கு விருந்தாகும் அரிய நூல். திராவிடம் என்றால் என்ன? திராவிட நாடு என்பது எது? திராவிட மொழி எது? என்பன போன்ற வினாக்களை எழுப்பினால் அவற்றுக்கு விடை காணும் முகமாக இந்நூல் அமைந்துள்ளது.
33 தலைப்புகளில் திராவிட நாடு குறித்த பல்வேறு பகுதிகளும் ஆய்வு செய்யப்பட்டு அரிய முடிவுகள் காணப்பட்டிருப்பது நூலின் தனித்தன்மை. திராவிட நாட்டைப் பற்றிக் கூறும்போது, “மொழியிலே, தமிழ் மொழியில் திசைகளுக்கு அமைந்த சொற்களிலே எல்லை காட்டி, மொழி எல்லையே இன எல்லையாக, இன எல்லையே நாட்டெல்லை யாக, நாட்டெல்லையே பண்பாட்டின் அகயெல்லையாகக் கொண்ட நானிலம், ஐந்திணை அளாவிய முழுநிலம் பண்டைத் தமிழகம், இன்றைய தென்னாடு - அதுதான் திராவிடம்” எனப் படிப்படியான ஆய்வு நுட்பங்களைத் தந்திருப்பது பன்மொழிப் புலவருடைய ஆராய்ச்சித் திறனைக் காட்டுகிறது.மேலும், ஒரு படிநிலையாக, 'தமிழ்மொழி, தமிழ் இனம், தமிழ்ப் பண்பு, இவை உயிர்ப்புடன் நிலவி, தங்கு தடையின்றி வளர்ந்து உலக நாகரிகம் வளர்ந்து வந்துள்ள, வளர்க்க இருக்கிற இடமே திராவிட நாடு' என அடையாளம் காட்டும் அழகு அருமை.