2G அலைக்கற்றை - உண்மை என்ன? பின்னணி என்ன?
மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சராக தி.மு.கவின் ஆ.ராசா இருந்தபோது, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் ரூ.1.76 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றதாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கு டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடந்துவந்தது. நாட்டையே உலுக்கிய இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோரை விடுவித்து சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி, கடந்த டிசம்பரில் தீர்ப்பளித்தார். 2 ஜி வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், தவறாக வழிநடத்தப்பட்டதாக விடுதலை பெற்ற ஆ.ராசா தெரிவித்திருந்தார். இந்த வழக்கில் சி.பி.ஐ. தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கிடையில், 2ஜி வழக்குத் தொடர்பாக ஆ.ராசா, ``2ஜி சாகா அன்ஃபோல்ட்ஸ்’’ என்ற புத்தகத்தை எழுதியிருந்தார். ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த அந்தப் புத்தகம் கடந்த ஜனவரி 20-ம் தேதி டெல்லியில் வெளியிடப்பட்டது. அந்தப் புத்தகத்தை ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா வெளியிட்டார். இந்தநிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடந்த விழாவில் `2ஜி-அவிழும் உண்மைகள்’ என்ற அந்தப் புத்தகத்தின் தமிழ்ப் பதிப்பு இன்று வெளியிடப்பட்டது. இந்த விழாவில் தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின், இந்து என்.ராம், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.