அங்கிருந்துதான் வந்திருக்கிறோம்
நவீனக் கவிதையில் பெரியார்!
மாரீசமானை வேட்டையாடப் போனவனை
மனக்குகையில் எழுந்த சிறுத்தைதான்
வேட்டையாடியது
- என மூன்றே வரிகளில் ராமாயணம் பற்றி தந்தை பெரியாரின் பார்வையைச் சுருக்கமாகக் கவிதையாக்கியுள்ளார் எழுத்தாளர் சுகுணா
திவாகர்.
’பெரியாரை நவீன கவிதைக்குள் கொண்டு வர முடியுமா?’ என்பதை, சவாலாக எடுத்துக் கொண்டு, பெரியார் குறித்து தான் எழுதிய நவீனக்கவிதைகளைத் தொகுப்பாக்கி ‘அங்கிருந்துதான் வந்திருக்கிறோம்' என்ற தலைப்பில் நூலாகக் கொண்டு வந்துள்ளார் நூலாசிரியர். இதனை, கருப்புப் பிரதிகள் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
புத்தகத்தின் அட்டைப்படம் தொடங்கி கடைசிப் பக்கம் வரை பெரியார் நவீனப்பட்டு மிளிர்கிறார். சமகால சிக்கல்களை பெரியாரிய பார்வையில் கவிதையாக்கியது மட்டுமன்றி, பெரியாரின் கடந்த காலச் செயல்பாடுகளையும் நவீனக் கவிதையில் அடக்கியுள்ளார்.
புதுமைப்பித்தன் காலத்திலேயே 'பெரியார் ராமசாமி' என்ற பெயர் சிறுகதைகளில் தோன்றத் தொடங்கி விட்டது. இன்றைக்கும் பல சிறுகதைகளில் பெரியார் நம்முடன் கைப்பிடித்து நடைபோடுகிறார்.
சுகுணா திவாகரின் இந்த தொகுப்பு பெரியாரை நவீனக் கவிதை உலகத்துக்கு அழைத்து வந்துள்ளது. நாம் எங்கிருந்து வந்தோம் என்பதை இந்த 72 பக்க கவிதைத் தொகுப்பு நமக்கு நினைவூட்டுகிறது.