தமிழக பள்ளிக் கல்வி
கி. பி. 2000க்குள் அனைவருக்கும் தொடக்கக் கல்வி’ என்பது சர்வதேச இலக்கு. இதை நிறைவேற்றுவதற்காக தமிழ்நாடு அரசு யுனிசெப் ஆதரவுடன் ஒரு செயல்திட்டம் வகுக்கும் பணியில் கல்வியாளரும், பல பத்தாண்டுகள் ஆசிரியப் பணியாற்றிய அனுபவம் மிக்கவருமான ச .சீ. இராசகோபாலனை ஈடுபடுத்தியது. அதன் விளைவாகத் தயாரிக்கப்பட்ட அறிக்கையைச் செயல்படுத்துவதற்கு அரசும், கல்வித் துறையும் முனையவில்லை.
இந்நிலையில் பல்வேறு பொது விசாரணைகளில் ஒருவராகப் பணியாற்றியபோது, தனது நாற்பதாண்டு ஆசிரியப் பணியில் அறிந்திராத பல உண்மைகளை அறிந்ததாகக் கூறுகிறார் ஆசிரியர். கும்பகோணம் பள்ளித் தீவிபத்து, அதைத் தொடர்ந்து இன்று விவாதத்திற்கு வந்துள்ள பல முக்கியப் பிரச்சனைகளான பெற்றோர், அரசு, ஆசிரியர்களின் பொறுப்புகள், சமச்சீர் கல்விமுறை, கல்வித்துறை முரண்பாடுகள், பதின்நிலைப் பள்ளிகளும், பல்கலைக்கழகமும், மக்களின் எதிர்பார்ப்புகள், பெற்றோர்-ஆசிரியர் சங்கங்கள், கல்வித் துறையின் முதற்கடமை, மொழிப்பாடம், தேர்வுகள், தொழிற்கல்வி, சுயகட்டுப்பாடு இவை பற்றிய தன் அனுபவத்தின் ஆழ்ந்த சமூகப் பொறுப்பின் அடிப்படையில் இக்கட்டுரைகளைத் ‘தினமணி', 'ஜனசத்தி', 'தமிழ் ஓசை’ நாளிதழ்களில் எழுதி வந்தவர் திரு.இராசகோபாலன்.
அனைவருக்கும் கல்வி தொடர்பான பிரச்சினைகளில் தலையிட்டு தொடர்ந்து இயங்கி வரும் மாணவர் அமைப்பான இந்திய மாணவர் சங்கம் 2008ம் ஆண்டிற்கான முன்னோட்ட முயற்சியாக இந்நூல் உட்பட 25 நூல்களை கல்வி எனும் பொருள் சார்ந்தே வெளியிட்டு ஓர் ஆரோக்கியமான விவாதத்திற்கு அடித்தளம் இட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. கல்வி குறித்த அக்கறையுள்ள அனைவரும் வாசித்து உள்வாங்கி விவாதிக்க வேண்டிய கருத்துகள் இவை.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.