சிங்க இளைஞனே சிலிர்த்து எழு
திராவிட இயக்கத்தின் நீண்ட வரலாற்றில் போற்றி மதிக்கப்படும் விடிவெள்ளியாகவும் எழுஞாயிறு ஆகவும் விளங்கும் தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் மக்கள் மனத்தில் நிலையான இடத்தைப்பெற்றவர்கள். தமிழ் மொழி, தமிழ் இன மேம்பாட்டுக்காகத் தம் வாழ்நாளெல்லாம் தொண்டாற்றி வரும் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் இந்த இயக்கம் அயராது மக்கள் தொண்டு ஆற்றி வருகிறது. அந்த வரிசையில் கடந்த 60 ஆண்டுகளாகப் பகுத்தறிவுக் கொள்கை வழிநின்று சமுதாயச் சீர்திருத்தக் கருத்துகளை ஒரே குறிக்கோளுடன் கொள்கை முழக்கம் செய்து வருபவர் நமது இனமானப் பேராசிரியர். அவர்தம் நூல்கள் பலவற்றை வெளியிட்டுப் பெருமை அடைந்த நாங்கள் இந்நூலை வெளியிடுவதிலும் மகிழ்ச்சியடைகிறோம்.திராவிட இயக்கத்தின் குறிக்கோள் வெற்றிபெற இளைஞர் அணித் தம்பிமார்கள் “உள்ளத்தில் உறுதி கொண்டால் அவர்களால் முடியாதது எதுவுமில்லை” என்ற எண்ணம் கொண்ட பேராசிரியர் அவர்கள், இளைஞர்கள் கொள்கைப் பிடிப்போடு தாய்மொழிக்கும் திராவிட இனத்திற்கும் தொண்டாற்றத் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்று பலகாலம் ஆற்றியுள்ள உரைகளின் தொகுப்பே இந்நூல். இந்நூலுக்கு மாநில இளைஞர்களின் தளபதியான இளைஞர் அணி அமைப்பாளர் வணக்கத்திற்குரிய சென்னை மேயர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அணிந்துரை தந்து இளைஞர்கள் இந்நூலைப் படித்து எழுச்சி பெற வேண்டு மெனக் கேட்டுக் கொண்டுள்ளார்.