என் வாழ்வு
மகாகவி பாரதியார் எழுதிய அனைத்துக் கதைகளையும் தொகுத்து பாரதியார் கதைகள் என்ற பெயரில் ஒரே தொகுதியாக வெளியிட்டிருக்கிறோம். எந்தக் கருத்தை எப்படிச் சொன்னால் பாமர மக்கள் ரசிப்பார்கள் என்ற கலை நுட்பத்தை மகாகவி அறிந்து, அதற்கேற்பத் தமது கதைகளைக் கவியாற்றலுடன் புனைந்துள்ளார் என்பதை அவருடைய இனிய கதைகளைப் படிப்போர் உணர்வர், உள்ளத்திலே தமிழ்ச் சக்தியை நிலை நிறுத்திக் கொண்டு நேரான தமிழ் நடையில் எழுதப்பட்ட கதைகள் இவை என்று சொல்வது பொய்யில்லை; முக்காலும் உண்மை. மூடி மறைத்தல், சுற்றி வளைத்து எழுதுதல் ஆகியன பாரதியாருக்கு உடன்பாடன்று என்பதையும் இக்கதைகள் நமக்குத் தெளிவாக்குகின்றன. பாரதியார் தாம் எடுத்துக்கொண்ட பொருளை மக்கள் உள்ளத்தில் ஊடுருவிப் பாய்ந்து தொழிற்படும் முறையில் கதைகள் மூலம் உணர்த்தினார். அது மட்டுமல்ல பாரதியார் பாமர மக்களின் உள்ளத்து எழுச்சிகளையும் உணர்ச்சிகளையும் தம் கதைகளிலே எதிரொலிக்கவும் செய்தார்.