பெரியார் - அம்பேத்கர் நட்புறவு ஒரு வரலாறு
அம்பேத்கரும் பெரியாரும் சென்ற நூற்றாண்டின் இருபெரும் சிந்தனையாளர்கள். சாதி, தீண்டாமை, பார்ப்பனீயம் என்கிற முப்பெறும் கொடுமைகளை எதிர்த்தவர்கள். இருவருக்கும் இடையே தொடர்ந்த நட்பு இறுதிவரை நிலவியது. அம்பேத்கரின் மதமாற்றத்தை முழுமையாக ஆதரித்தவர் பெரியார் ஒருவர்தான்.
சமகாலத்தில் பெரியாரியத்திற்கும் அம்பேத்கரியத்திற்கும் இடையிலான ஒற்றுமையைச் சிதைப்பதில் முன்னணியில் இருந்தவர் ரவிகுமார். அவரது பார்ப்பனீய/ ஆர்.எஸ்.எஸ் சாய்வுகள் ஊரறிந்த உண்மை. இன்னொரு பக்கம் பெங்களூரு குணாவால் தொடங்கி வைக்கப்பட்டு இன்று சீமான் போன்றவர்களால் முன்னெடுக்கப்படும் திராவிடக் கருதியல் வெறுப்பு அரசியல். இது இன்று பார்ப்பனீய ஆதரவுடன் முன்னெடுக்கப் படுகிறது. இவர்கள் பெரியார் எதிர்ப்பை முன்நிலைப் படுத்தினாலும் அடிப்படையில் இவர்கள் அம்பேத்கரியத்திற்கும் எதிரானவர்களே. ‘அம்பேத்கராம் மராட்டியர்’ – என எழுதியவர்கள்தான் இவர்கள். இவர்களே வாழ்நாளெல்லாம் தமிழர்களின் சுயமரியாதைக்காக நின்ற பெரியாரையும் கன்னடர் எனக் கூசாமல் சொல்கிறவர்களும் கூட.
இந்தப் பின்னணியில்தான் இங்கு பார்பனீயப் புத்துயிர்ப்பு விஷமென வளர்ந்து வருகிறது. இந்நிலையில் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் சிந்தனைகளின் ஒருங்கிணைந்த போக்கையும் அவற்றின் முக்கியத்துவத்தையும் மேலுக்குக் கொண்டுவரும் இந்நூல் முக்கியத்துவம் பெறுகிறது.