தமிழ் உரைநடை வரலாறு
தமிழ் உரைநடை வரலாறு -
உரைநடை, மொழியின் ஒரு வடிவம். கவிதை போலின்றி நேரடியாகவே சொல்ல வந்ததைச் சொல்வது; அது பேச்சின் இயல்பான ஓட்டத்தையும் இலக்கண அமைப்பையும் வெளிப்படுத்துகிறது.
செய்யுள்தமிழ் உரைநடைத் தமிழாக மாறிய வரலாறு நாம் அறியாமலே நடந்து முடிந்த ஒரு மொழிப்புரட்சி என்றுதான் சொல்ல வேண்டும். இந்த வரலாற்றை முறைப்படி ஆய்வுநோக்கில் விவரிக்கும் முதல் நூல் பேராசிரியர் வி. செல்வநாயகத்தின் ’தமிழ் உரைநடை வரலாறு.’
பேராசிரியர் இந்த நூலில் உரைநடை வளர்ச்சிப் படிகளைத் தக்க சான்றுகளுடன் இனங்காட்டி, அவற்றின் பரப்பைச் சங்ககாலம், களவியலுரைக் காலம், உரை ஆசிரியர்கள் காலம், ஐரோப்பியர் காலம், இருபதாம் நூற்றாண்டு என ஐந்து காலகட்டங்களாகப் பிரித்து விவரிக்கிறார்.முதலில் செய்யுள், உரைநடை ஆகியவற்றின் தோற்றம், அமைப்பு பற்றிக் குறிப்பிட்டு, பிறகு ஒவ்வொரு காலத்திலும் எழுந்த உரைநடை நூல்களையும் அவற்றின் பண்புகளையும் அதற்கான பின்னணியையும் விளக்குகிறார்.
இதைச் சாசனத்தமிழ் முதல் மணிப்பிரவாள நடைவரை, செய்யுளை விளக்க வந்த இளம்பூரணர் முதல் மெய்கண்ட தேவர் உரை வரை, ஐரோப்பியர் வருகைக்குப் பிறகு உண்டான மாற்றங்களைக் கையாண்ட தத்துவபோதக சுவாமிகள் முதல் ஆறுமுக நாவலர் வரை, தனித்தமிழ் நடை, மறுமலர்ச்சி நடை எனப் பல்வேறு தலைப்புகளில் வகைப்படுத்தி, எளிய நடையில், மனதில் பதியும்படி செய்கிறார். இதன் மூலம் இந்த நூல் கதை, கட்டுரை, ஊடகம் எனப் பெரும்பாலும் நாம் இன்று தொடர்பாடலுக்குப் பயன்படுத்தும் உரைநடை வடிவம் தம் காலவோட்டத்தில் என்னென்ன மாற்றங்களை அடைந்திருக்கிறது என்பதைக் கண்டுகொள்ள உதவுகிறது.
இதனால்தான் இந்த நூலைப் பற்றிப் பேராசிரியர் எம். ஏ. நுஃமான், ‘தமிழ் உரைநடை வரலாறு பற்றிய பல்வேறு தகவல்களைத் தரும் ஒரு கைநூல் மட்டுமல்ல, தமிழைப் பயிலும் மாணவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் ஆர்வமுடைய பொது வாசகர்களுக்கும் என்றும் பயன்படும் ஓர் அரிய நூல்’ என்கிறார்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.