திராவிட இயக்க ஒவ்வாமை நோயிலிருத்தல்
பொதியவெற்பன் “திராவிட இயக்க ஒவ்வாமை நோயிலிருத்தல்” என்னும் இந்நூலில் வரலாற்றிலும், சமகாலத்திலும் திராவிடர் இயக்கத்தின் மீது நிகழ்த்தப்படுகின்ற அவதூறுகளின் ஆழ்மன நோயை கண்டறிந்து அவற்றோடு ஒரு பெரும் கருத்து மோதலை நிதழ்த்தியுள்ளார். பண்பிற்கு இலக்கணம் பார்ப்பனியம், என எழுதியும் பேசியும் வருகிற ஜெயமோகனுக்கே இந்நூலின் பெரும் பக்கங்களை ஒதுக்கி விவாதித்துள்ள போதிலும், பொதியவெற்பன் எதிர்கெள்ளும் கருத்தெல்லைகள் கைலாசபதி, சிவத்தம்பி, முத்தையா போன்ற இடதுசாரிகளின் கருத்துநிலைகளையும் விமர்சிக்கின்றன. காலனியம் உருவாக்கியதே ஆரிய மாயை, திராவிட மாயை எனச் சொல்லும் நண்பர்கள், இந்து மாயையும் காலனிய புனைவுதான் என ஏன் சொல்ல மறுக்கின்றார்கள் என முத்தையாவை நோக்கி வைத்துள்ள கேள்வி மிக முக்கியமானது.பெரியார் நடத்தியது ‘திராவிடர்’ என மக்களுக்கான, பண்பாட்டிற்கான இயக்கமென்பதால்தான், ‘பிகாரில் சாதியின் பெயரால் ஒடுக்கப்படுகிறவரையும் திராவிடராகத்தான் கருதுகிறேன்’ என சொல்லவும், அம்பேத்கருடனும் ஜின்னாவுடனும் லோகியாவுடனும் கைகோர்த்து பணி செய்யவும் பெரியாரால் முடிந்தது. ஒரு தலைமுறையில் அறிமுகமாகி, இன்னொரு தலைமுறையினரோடு உரையாடும், விவாதிக்கும் ஆற்றல் வாய்ந்தவர் தோழர் பொதியவெற்பன்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.