சாம்பலாகவும் மிஞ்சாதவர்கள்
தீண்டாமை ஒரு பாவச்செயல்,தீண்டாமை ஒரு பெருங்குற்றம்,தீண்டாமை ஒரு மனித தன்மையற்ற செயல் என்று ஏட்டளவில் மட்டும் சொல்லிக்கொடுக்கும் நம் கல்வி முறை சாதி ஒழிப்பு குறித்து என்றேனும் பேசியிருக்கிறதா?கல்வி முறை மட்டுமல்ல ,நம் வீடுகளும் குடும்பங்களும் சாதி மற்றும் மத மறுப்புத் திருமணங்களை ஏற்றுக்கொள்ளுமானால்,சிறு வயதிலேயே சாதி என்பது உயிர்க்கொல்லி என்கிற கருத்தை பிஞ்சு மனங்களில் ஏற்றினால்,இனி வரும் தலைமுறையிலாவது சாதி குறித்த வெட்டிப் பெருமிதங்களும்,அதன் காரணமாக நிகழும் கெளரவகொலைகளும் ஓரளவுக்கேனும் குறையும் என்று நம்பலாம்.
ஆதாயக் கொலைகளைவிட, சொந்தப் பகைமைக் கொலை களைவிட, சாதி ஆணவக் கொலைகள் அதிகம் நடக்க ஆரம்பித்து இருக்கின்றன. இவை சட்டம் - ஒழுங்குப் பிரச்னை அல்ல... சமூக ஒழுங்குப் பிரச்னை.
ஏன் இந்தக் கொலைகள் நடக்கின்றன? ஒரு திருமணத்தால் எல்லாம் மாறிவிடுமா? மிகச் சரியான காரணத்தை கவின்மலர் சொல்கிறார்:
"ஆதிக்கச் சாதி சமூக அமைப்பில் பெண்தான், சாதித் தூய்மையின் அடையாளமாகக் கருதப்படுகிறாள். இதர சாதிகளுடன் உறவு என்பது, அவளைத் தீட்டுப்படுத்து வதாகவும், எனவே சாதியும் கெட்டுப்போவதாகவும் கருதப்படுகிறது. சாதியை நிலைநாட்ட, அவள் ஒரு கருவியாகப் பயன்படுத்தப் படுகிறாள்.
வாரிசைப் பெற்றுக் கொடுக்கும் இடத்தில் இருக்கும் அவள்தான், கற்போடு இருக்க வேண்டும். கணவன் யாரிடம் போய்விட்டு வந்தாலும் பரவாயில்லை" என்ற வார்த்தைகளில் சமூக அழுக்கு மொத்தமும் சொல்லப்பட்டு விடுகிறது.
சாதி ஓர் உயிர்க்கொல்லி. அதைக் கொல்லும் உயிர்க் கொல்லியைக் கண்டடையத் தூண்டும் கட்டுரைகள் இவை. ஒடுக்கப்பட்டோரின் பக்கம் நின்று உரத்த குரலில் பேசியிருக்கிறார் கவின் மலர்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.