பாரதிதாசன் கவிதைகளில் பெண்ணுரிமையும் பெரியாரும்
மனிதர் வாழ்வு இன்ப துன்பங்கள் நிறைந்தது. ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு மாறுபட்ட கருத்தை உடையவரே. சிலர் சுயநலம் உடையவராகவும், சிலர் பொதுநலம் கொண்டு சமுதாயத்திற்குத் தொண்டு செய்பவராகவும் உள்ளனர். அக்காலத்தில் பெண் இனத்தைப் போற்றினர். அவளைத் தெய்வமாகவும் மதித்தனர். ஆனால் காலம் செல்லச் செல்ல அவர்கள் ஒரு கைப்பொம்மையாகவே நடத்தப்பட்டனர். அவற்றில் இருந்து தங்களை வெளிக்கொண்டு வர உருவாக்கிய சொல்லே “பெண்ணியம்”. இத்தகைய பெண்ணியத்தைச் சமுதாயத்தில் பல தலைவர்கள் உருவாக்கினர். அதில் ஒருவர் தமிழ்நாட்டில் தோன்றிய ஈடு இணையற்ற தலைவர் பெரியார்.
தமிழக மக்களுக்காக 50 ஆண்டுக்காலம் பாடுபட்டவர் பெரியார். மக்கள் சார்பிலான தமிழகச் சிந்தனைப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியில் ஒரு பேரலையாக எழுந்தவர் பெரியார். தமிழகத்தில் வள்ளுவர், சித்தர்கள், வள்ளலார் ஆகியவர்களுக்கு நிகரான பெருமைக்கு உரியவர். அனைத்திந்திய அளவில் புத்தர், அம்பேத்கர் ஆகியவர்களுக்கும், எதிர்நிலையில் சங்கரர், விவேகானந்தர் ஆகியவர்களுக்கும் நிகரான பெருமைக்குரியவர். இந்திய - தமிழக சமூக முரண் பாடுகள் கடுமையாகப் பெரியாரிடம் பிரதிபலித்தன. இன்றுள்ள பல பிரச்சனைகளில் பெரியாரின் பாதிப்புகள் அழுத்தமாகப் பாதித்துள்ளன. இவை இன்னும் நீண்ட காலத்திற்குத் தொடரும். இந்திய - தமிழகச் சமூக அளவிலான புரட்சியின் வெற்றியில் பெரியாரின் பங்கு என்றும் மரியாதையோடு நினைக்கப்படும். தமிழகத்தில் சமதர்மத்தின் தேவையை வற்புறுத்திய மூலவர்களில் ஒருவர் பெரியார். பெரியாரின் மேன்மைகள், முரண் பாடுகள், சாதனைகள், தோல்விகள் ஆகிய அனைத்தும் இந்திய, தமிழகச் சூழலோடு தொடர்புடையவை.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.