அறியப்படாத இந்து மதம்
“அறியப்படாத இந்து மதம்” எனும் நூலுக்கு (முதல் பாகம்) முனைவர் சிவ இளங்கோ வழங்கிய அணிந்துரையின் சிறு பகுதியைக் கீழே பார்ப்போம்.! தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும்; தர்மம் மறுபடியும் வெல்லும்” என்று பகவத் கீதை சொல்லும் வாசகங்களைக் கேட்க மயக்கமாகத் தான் இருக்கும். ஆனால் அதிலுள்ள சூழ்ச்சிகளைப் புரிந்தால் நாம் இத்தனை ‘ஏமாளிகளா?’ என்று எண்ணத் தோன்றும். அதைத் தோற்றுவிக்கும் முயற்சியே இனிய நண்பர் திரு செ.தி. ஞானகுரு அவர்கள் எழுதிய “அறியப் படாத இந்து மதம்” என்னும் இந்நூலின் நோக்கம். எந்த ‘முன் முடிவும்’ இல்லாமல் இந் நூலை வாசிக்கவும் என்று எச்சரிக்கையுடன் தொடங்கும் திரு ஞானகுரு, தான் ‘இந்து’ என்பதை ஒருவன் ஒப்புக் கொண்டாலே அவன் மீது சுமத்தப்படும் இழிவுகளை மிக நாசுக்காக, மிகப் பட்டவர்த்தனமாக, ஆணித் தரமாக விளக்கியிருக்கிறார்.! அது ஏதோ அவராகவே இட்டுக்கட்டி எழுதிய கற்பனையாக இல்லாமல், இந்து மதத்தினை எந்த சாஸ்திரங்கள் கட்டமைத்தனவோ, அந்த சாஸ்திரங்களில் கூறப்பட்ட விளக்கங்கள் கொண்டே அவற்றை நிறுவியிருக்கிறார். அதற்காக அவரது முயற்சிகளுக்கும், பட்ட பாடுகளுக்கும் ‘இந்து’ சமுதாயமும், ஏனைய சமுதாயங்களும் அவருக்கு நன்றி கூறியே ஆக வேண்டும். இந்து மதத்தை ஏற்பவரும், ஏற்க விரும்பாதவர்களும் இந்நூலை அவசியம் படிக்க வேண்டும்.! ஏதோ, இந்து மதத்தில் நாம் அறியாத சில பக்கங்களை ஞானகுரு காண்பிக்கப் போகிறார் என்று உள்ளே நுழைந்தால், இதயபலம் அற்றோர் இதைப் படிக்க வேண்டாம் என்று எச்சரிக்கும் அளவில் அத்தனைத் திடுக்கிடும் செய்திகள் இதில் நிறைந்துள்ளன. சூத்திரர்களையும், குதிரையையும் ஒன்றாகப் பார்க்கும் வன்மமாகப் “புருஷசூக்தம்” நூல்.! மருத்துவம் பொதுவானதல்ல என்கிறது “ஸுசுருத சம்ஹிதை”..! கோயில்கள் பொதுப் பட்டவை அல்ல என்று “காமிகாகம”மும், இரு பிறப்பாளர் அல்லாதோர் வேதம் கேட்டால், ஓதினால், மனனம் செய்தால் எவ்விதமானத் தண்டனைகள் என்பதை “ஸ்ரீபாஷ்யமு”ம் விவரிக்கின்றன. “சம்புரோக்ஷனம்” என்பது கோவிலில் நடக்கும் “சிறப்பு அர்ச்சனை” என்று நினைத்ததைப் போக்கி, அது தீட்டுக் கழிக்கும் சடங்கு என்பதை இராமானுஜரின் “ப்ரபந்நாம்ருதம்” கூறுகிறது. அனைத்துப் பாவங்களுக்கும் பெண்களே ஆணிவேர் என்கிறது “உமா சம்ஹிதை”. சிவபுராணத்து பஞ்சசூடை என்னும் தேவலோகப் பெண் நாரதரிடம், “பெண்களின் இயல்பை”ப் பற்றிக் கூறுவதை காது கொடுத்துக் கேட்க முடியாது. நாரதன் எப்படித்தான் கேட்டானோ? கேட்டுப் பிற தேவர்களுக்கும் சொல்கிறான்; இது மகாபாரதத்தில்! அந்த வாசகங்களைத் தமிழில் தர மனம் கூசுவதால் ஆங்கிலத்தில் தந்திருக்கிறார் நூலாசிரியர் ஞானகுரு.! ஆதிசிவனின் படுகேவலமான லீலைகளை “திருமூர்த்தி உண்மை” கூறுகிறது. நான்கு வர்ணர்களுக்கும் தகுந்தாற் போல் லிங்கங்களைப் பற்றி விவரிக்கிறது “ஸ்ரீ காசியப சில்ப சாஸ்திரம்” என்னும் நூல்.! இப்படிப் பட்ட சிவனடியார்களுக்கு மட்டுமே சொர்க்கம் என்கிறது “தரும சம்ஹிதை”.! கண்ணன் – கோபியரின் ராசக் கிரீடைகளை “ஸ்ரீ கோபிகா கீதை” விவரிக்கிறது.! பேதம் இல்லை என்பதே பேதைமை என்பதை நிரூபிக்கிறது “பராசர ஸ்மிருதி”.! மிருகபலி, நரபலிகளைப் புனிதமாக்குகிறது “யாகமும் வைதீக மதமும்” நூல்.! இது “தெய்வத்தின் குரல்” ஆகவும் ஒலிக்கிறது.! மண், மரம், கல், உலோகம் உள்ளிட்ட எல்லா இறைவன் படைப்புகளிலும் சாதி உண்டு என்று “பிராம்ஹீய சித்ரகர்ம சாஸ்திரம்” கூறும்.! மந்திரம், ஏவல் போன்றதே அர்ச்சகம் என “காமிகாகமம்” தெரிவிக்கிறது.! இப்படியாக வைதிகத்தின் அனைத்துச் சூழ்ச்சிகளையும் அவர்களே வெளியிட்ட ஆதாரங்களோடு நிரூபிக்கிறார் நூலாசிரியர் ஞானகுரு.!
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.