நீங்களும் பேச்சாளர் ஆகலாம்
முத்தாரம் வரைந்த முன்னுரை
மேடையில் பேசுவது ஒரு கலை.
கலை மட்டுமல்ல; அது ஒரு திறமை – கைத்தொழில் போல!
குறிப்பாக ஒரு ஜனநாயக நாட்டில் வாழ்வோரிடம் இந்தத் திறமை இல்லாவிட்டால் ஒளிவிட முடியாது. அந்தத் திறமையின்மை ஒரு பற்றாக் குறையாகத்தான் இருக்க முடியும். அகில உலக அளவில் ஐ. நா. சபையிலோ - நாட்டளவில் பாராளுமன்றத்திலோ பணியாற்றுவதற்கு மட்டுமல்ல;
நகராட்சியிலும், ஊராட்சியிலும் செயலாற்றுவதற்குக்கூடப் பேச்சுத் திறமை தேவைப்படுகிறது.
இருபதாம் நூற்றாண்டில் அரசியல் அரங்கில் மட்டுமல்ல. சமூகப் பொருளாதார வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் பேச்சுக்கலை மிக முக்கியத் தேவையாக இருக்கிறது.
வேலை தேடி நேர்முகத் தேர்விற்குச் செல்வோர், அங்கே ஒரு சிறு 'சபை'யைச் சந்தித்து; கேள்விகளுக்குப் பதில் அளிக்கும்போது ஒரு சிறு 'சொற்பொழிவை' நிகழ்த்த வேண்டியிருக்கிறது!
வணிகர்களும் அவர்களின் பிரதிநிதிகளும் தங்கள் ஒவ்வொரு பொருளையும் பேச்சுத் திறமையால் விற்க வேண்டியிருக்கிறது!
பெரிய நிறுவனங்களை நிருவகிப்போர், பங்குதாரர்கள் கூட்டத்தில் ஆண்டுக்கு ஒருமுறையாவது பேசித் தீரவேண்டி யிருக்கிறது!
இவ்வாறு அனைவரின் அன்றாட வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் பேச்சுத் திறமை தேவைப்படுவதால், அமெரிக்காவில் பல்கலைக்கழகங்களில் பேச்சுத் திறமையை ஒரு பாடமாகப் பயிற்றுவிக்கின்றார்கள்.
அமெரிக்காவில் பேச்சுக்கலை குறித்து, பல்கலைக்கழகங்கள் செய்துவரும் பணியைத் தமிழ் நாட்டில் தி. மு. கழகம் செய்துவருகிறது என்றால், அதை அதன் அரசியல் எதிரிகளும் ஒப்புக்கொள்வார்கள் என்பதில் ஐயமில்லை.
முத்தாரத்தின் முதல் இதழ் 'பேசும் கலை வளர்ப்போம்' என்கிற கலைஞரின் கட்டுரை தாங்கி வந்தது.
இப்போது முத்தாரத்தில், 'நீங்களும் பேச்சாளர் ஆகலாம்' என்கிற கட்டுரைத் தொடரினைப் பேராசிரியர் துவக்கி வைக்கிறார்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.