பெண் ஏன் அடிமையானாள்? (நாம் தமிழர் பதிப்பகம்)
பெண்களை, “சூத்திரர்”களான நாலாஞ் ஜாதியினரைவிடக் கீழாக மதிக்க வேண்டியவர்கள் என்கின்றது மனுதர்மம்! இந்து மதம் என்ற ஆரிய மதம் பெண்களை வெறும் உயிரற்ற பொருளாகத்தான் நினைக்க வைக்கிறது.
பெண்களை ஆண்களுக்குக் குற்றேவல் செய்யும் நிபந்தனை அற்ற அடிமைகளாக நினைக்கும் போக்கை, நமது சமுதாயத்தின் சரி பகுதி மக்களான பெண்கள் சமுதாயம் எதற்கும் லாயக்கற்ற, பயனற்ற பதுமைகளாக இருக்கும் நிலையை மாற்ற, இறுதி மூச்சு உள்ளவரை பணியாற்றிய தந்தை பெரியார் அவர்கள் நீண்ட காலத்திற்கு முன்பு எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது.
ரசல் அவர்களது. “Marriages and Morals” – “திருமணங்களும், ஒழுக்கமும்” என்ற நூல் எவ்வளவு பெரியதொரு புரட்சியை உண்டாக்கியதோ, அதைவிடப் பெரும் புரட்சிக்குரிய நூலாகும் இந்நூல்!
மேற்குத் தந்த சீரிய பகுத்தறிவு வாதியான பெர்ட்ரண்டு ரசல் அவர்கள், அந்நூலில் கையாளும் கருத்துகள் (உவமை, ஒற்றுமை உள்பட) தந்தை பெரியார் அவர்களது இந்நூலில் இருக்கின்றன. சிறந்த சிந்தனையாளர்கள் எப்படி ஒரே பாணியில் சிந்திக்கிறார்கள் என்பதற்கு இது உதாரணமாகும்.
பெண்ணடிமை ஒழிக்க வந்த அய்யாவை அடையாளம் கண்டுதான் தமிழ்நாட்டுத் தாய்க்குலம் ‘பெரியார்’ என்று தந்தைக்குத் தனிப்பெரும் பட்டம் தந்து, தனது நன்றி உணர்வைத் தந்தைக்குக் காட்டியது எவ்வளவு பாராட்டத்தகுந்தது!
இந்நூல் – உலக ஜனத் தொகையில் ஒரு பாதியாய் மக்களின் தோற்றத்திற்கு நிலைக்களனாய் விளங்கும் பெண்ணுலகு கற்பு, காதல், விபச்சாரம், கைம்மை, சொத்துரிமை இன்மை முதலிய கட்டுப்பாட்டு விலங்குகளால் தளையப்பட்டுள்ளதை சுட்டுகிறது. மூடநம்பிக்கையால் அல்லற்பட்டு வரும் பெண்களின் விடுதலைக்கும் வருங்கால மக்களின் பகுத்தறிவு வளர்ச்சிக்கும், சுயமரியாதைக்கும் தடையாயிருக்கும் கட்டுப்பாடு என்னும் விலங்கொடித்து கர்ப்பத்தடை, சொத்துரிமை முதலியவைகளைப் பெற்று பெண்கள் சுதந்திரம் பெற வழிவகுக்கிறது.