பெண் எனும் பிள்ளைபெறும் கருவி (வாடகைத் தாய் முறை மீதான கேள்விகள்)
வாடகைத் தாய் முறை மனித மாண்பிற்கு எதிராக இருக்கிறது. பெண்ணை இயந்திரமாக மாற்றுவதற்கு அறிவியல் பயன்படுத்தப்படுகிறது. தன்னுடல் மீதான உரிமையை ஏழைப் பெண்ணுக்கு வாடகைத் தாய் முறை மறுக்கிறது. அவளை இழிவுபடுத்துகிறது. அவளைக் கடைச்சரக்காக மாற்றுகிறது. கருப்பைக்கு விலைபேசுகிறது. பிறக்கும் குழந்தையின் எதிர்காலத்தைக் கேள்விக்கு உள்ளாக்குகிறது. உழைக்கும் வர்க்கப் பெண்களைச் சுரண்டும் புதிய முறையாக வாடகைத் தாய் முறை இருக்கிறது.
வாடகைத் தாய் முறை உழைக்கும் வர்க்கப் பெண்களுக்கு எல்லையில்லாத் தீங்குகளையே விளைவிக்கும், மேட்டுக்குடிப் பெண்களுக்கு நன்மைகளை மட்டுமே தரும். எக்காலத்திலும் மேட்டுக்குடிப் பெண்கள் வாடகைத்தாயாக மாறியதில்லை. மாறப்போவதில்லை. உழைக்கும் வர்க்கப் பெண்களை வாடகைத் தாய் முறை சுரண்டுகிறது என்பதற்கு இந்த ஒரு சான்றே போதும்.
இந்தியாவில் பெரும்பாலும் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள பெண். கணவனால் கைவிடப்பட்ட பெண் போன்றோர் தான் வறுமையின் காரணமாக. வாடகைத் தாயாக இருக்க ஒப்புக்கொள்கிறார்கள். அவர்களின் வறுமையைப் பயன்படுத்தி மேட்டுக்குடியினரின் திமிருக்குத் துணை நிற்பது தனியார் மருத்துவமனைகளின் இலாப வேட்டை.
சு.விஜயபாஸ்கர்