Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

பெண் ஏன் அடிமையானாள் (முகவுரை)

முகவுரை:

 

“பெண் என் அடிமையானாள்?” என்னும் இப்புத்தகத்தில் கண்ட விஷயங்களுக்குப் பிரசுரிப்போரின் விருப்பப்படி முகவுரை என்று சில வரிகளாவது எழுதவேண்டியது அவசியமென்றே கருதுகிறோம். ஏனெனில், இதில் கண்ட விஷயங்கள் இதுவரை மக்களிடையே இருந்து வருகின்ற உணர்ச்சிகளுக்கும், ஆதாரங்களுக்கும், மனித சமூகக் கட்டுப்பாடு, ஒழுக்கம், ஆசாரம், மதக்கொள்கை, சாஸ்திர - விதி என்பனவாகியவற்றிற்கும் பெரிதும் முரணாகவும், புரட்சித்தன்மை போன்ற தலைகீழ் மாறுபாடான அபிப்பிராயங்கள் கொண்டதாகவும் சாதாரண மக்களுக்குக் காணப்படுமாதலால், இப்படிப்பட்ட மக்களிடம் வெறும் நியாய உறுதியையும் பகுத்தறிவு உறுதியையும் கொண்டு ஒரு விஷயத்தை மெய்ப்பித்துப் புகுத்திவிடலாம் என்று எண்ணிவிட முடியாது. மேலும் ஒரு அபிப்பிராயமானது எவ்வளவு நியாயமான தானாலும், பகுத்தறிவுக்கும், ஆராய்ச்சிக்கும் விளங்க முடிந்த உண்மையானாலும், பழக்க வழக்கத்தைச் சொல்லியோ, சாஸ்திர ஆதாரத்தைச் சொல்லியோ, மதக் கொள்கையைச் சொல்லியோ வெகு சுலபத்தில் யாரும் ஒரு சிறு பகுத்தறிவு ஞானமோ, நடுநிலை லட்சியமோ இல்லாது ஆட்சேபித்து மறுப்புக்கூறி, அதற்குப் பழிப்பை உண்டாக்கிவிடலாம் என்பதோடு, அம்மறுப்புகளையும், பழிப்புகளையும் ஏற்றுக் கொள்ளும்படியாய் பாமர மக்களைச் சுலபத்தில் செய்துவிடலாம். ஆதலால், இதற்குத் தக்க சமாதானம் சொல்லி மெய்ப்பிக்க வேண்டியிருக்கிறது. எனவே, அதற்காக முகவுரை என்னும் பேரால் சில வரிகளை எழுதுகிறோம்.

இப்புத்தகத்தில் முதலாவது அத்தியாயமாகிய கற்பு என்னும் விஷயத்தின் முக்கியக் கருத்தெல்லாம் மக்கள் ஆண்-பெண் என்ற இரு சாரரில் பெண்களுக்கு மாத்திரமே அது (கற்பு) வலியுறுத்தப்பட்டிருக்கிறதென்றும், இவ்வலியுறுத்தலே பெண்ணை அடிமையாக்குவதற்குப் பெரிதும் காரணமாய் வந்திருக்கிறதென்றும் ஆண் - பெண் இருவரும் சரிசமமான சுதந்திரத்துடன் வாழவேண்டும் என்கிற நிலைமை ஏற்படவேண்டுமானால், மேற்கண்ட கற்பு என்பதன் அடிப்படையான லட்சியமும், கொள்கையும் மாற்றப்பட்டு அது விஷயத்தில் ஆண், பெண் இருவருக்கும் ஒன்று போன்ற நீதி ஏற்படுத்தவேண்டும் என்பதை வலியுறுத்துவதாகும்.

இரண்டாவது அத்தியாயமான வள்ளுவரும் - கற்பும் என்னும் அத்தியாயத்தின் நோக்கமென்னவென்றால், நீதி நூல்கள் என்பவைகள் எப்படிப்பட்ட பெரியோர்களால் எழுதப்பட்டவைகள் என்றாலும் அவை அக்கால நிலையையும், எழுதப்பட்ட கூட்டத்தின் சவுகரியங்களையும் அனுசரித்து எழுதப்பட்டதென்றும், மற்றும் ஒரு நீதியானது எக்காலத்தும் எல்லாத் தேசத்திற்கும், எல்லாக் கூட்டத்தாருக்கும் சவுகரியமாகவும், பொதுவாயும் இருக்கும்படியாக எழுத முடியாதென்றும், ஆதலால் எந்தக் கொள்கையும் எக்காலத்தும், எல்லாத் தேசத்திற்கும், எல்லோருக்கும் சவுகரியமாயிருக்குமென்றும் கருதி, கண்மூடித்தனமாய், குரங்குப் பிடிவாதமாய்ப் பின்பற்றக் கூடாது என்றும் வலியுறுத்த எழுதப்பட்டதாகும்.

 மூன்றாவது அத்தியாயமான ‘காதல்’ என்பது ஒரு தெய்வீகச் சக்தியால் ஏற்பட்டதென்றும், அது என்றும் மாற்றப்பட முடியாததென்றும், ஆதலால், ஒரு தடவை காதல் என்பது ஏற்பட்டுவிட்டால், எந்தக் காரணத்தைக் கொண்டும் பிறகு அதை மாற்றிக் கொள்ளக் கூடாதென்றும் சொல்லப்படும் நிர்ப்பந்தக் காதலைப் பொய்யென்று எடுத்துக்காட்டவும், காதல் என்பது ஒரு ஆசையென்றும், அந்த ஆசை ஏற்படவும் மறைந்து போகவுமான தன்மை கொண்டதென்றும், அதுவும் ஆசைப்படுபவர்கள் திருப்தியையும், நலத்தையும், பலத்தையுமே அஸ்திவாரமாய்க் கொண்டதே ஒழிய வேறெதையும் பொறுத்ததல்ல என்றும் எடுத்துக்காட்ட எழுதப்பட்டதாகும்.

நான்காவது அத்தியாயமாகிய ‘கல்யாண விடுதலை’ என்பது அதுபோலவே அதாவது, கல்யாணம் என்பது ஆண் - பெண் இவர்களுடைய வாழ்க்கை சவுகரியத்திற்கேற்பட்ட ஒரு ஒப்பந்த விழாவே ஒழிய, அதில் எவ்விதத் தெய்வீகத் தன்மை என்பதும் இருக்க நியாயமில்லை என்பதையும், அப்படிப்பட்ட கல்யாணம் என்பதும் இருபாலார்களுடைய வாழ்க்கைச் சவுகரியத்திற்கு ஒத்துவரவில்லையானால், இரத்து செய்துவிடத்தக்கதே என்பதையும் விளக்க எழுதப்பட்டதாகும்.

அய்ந்தாவது அத்தியாயமாகிய ‘மறுமணம் தவறல்ல’ என்பதும், முன் அத்தியாயத்தை அனுசரித்தும் ஒருதரம் கல்யாணம் செய்தோர் மறுபடியும் கல்யாணம் செய்துகொண்டால், செய்துகொள்வது தவறு என்று சொல்வதைக் கண்டித்தும், கல்யாணம் என்பது முன் குறிப்பிட்டதுபோல ஆண் - பெண் இருவர் வாழ்க்கை சவுகரியத்திற்கும், சந்தோசத்திற்கும் ஏற்றதே ஒழிய வேறில்லை என்றும், அது அப்படி இல்லாமல் போகுமாயின், ஒரு தடவை கல்யாணம் செய்துகொண்டோமே, இரண்டு பேரும் உயிருடன் இருக்கிறோமே; இனி எப்படி இதில் யாராவது ஒருவர் மறுமணம் செய்துகொள்வது என்று மயங்காமலும், இந்நிலையில் முன் மனம் செய்துகொண்ட பெண்ணின் கதியோ, அல்லது ஆணின் கதியோ என்ன ஆவது என்பதாய்க் கருதி ஒருவருக்கு அசவுகரியம் ஏற்படுமே என்பதற்காக ஒருவர் கஷ்டப்படுவது என்பதைக் கண்டிக்கவும், மறுமண முறையை இருவரும் கைக்கொண்டால் யாருக்கும் கஷ்டம் ஏற்படாது என்பதை வலியுறுத்தவும், இன்னின்ன சந்தர்ப்பங்களில் மறுமணம் செய்துகொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் விளக்கவும் எழுதப்பட்டதாகும்.

ஆறாவது அத்தியாயமானது ‘விபச்சாரம்’ என்னும் தலைப்புக் கொண்ட அத்தியாயம் விபச்சாரம் என்னும் குற்றம் சுமத்தப்படுவதானது பெண்ணுக்கே உரியதாயிருக்கின்றதே தவிர, அது உலக வழக்கில் ஆணுக்குச் சம்பந்தப்படுவதில்லை என்றும், இதனால் ஆண்கள் தாராளமாய் விபச்சாரம் செய்யவும், அதனால் பெண்களுக்குக் கஷ்டம், நஷ்டம், வியாதி, வாழ்க்கை இன்பமின்மை முதலிய துன்பங்கள் ஏற்பட இடமாகின்றதென்றும், விபச்சாரம் என்பது எந்தப் பொருளிலாவது குற்றமாகுமானால், அது இருபாலாருக்கும் சமமாய் இருக்கவேண்டும் என்றும் வவியுறுத்தவே அநேக தத்துவ அனுபவ உண்மைகளைக் கொண்டு எழுதப்பட்டதாகும்.

ஏழாவது அத்தியாயமாகிய ‘விதவைகள் நிலைமை’ என்னும் தலைப்புக்கொண்ட அத்தியாயமானது பெண்கள் விதவைத் தன்மையால் அனுபவிக்கும் கொடுமையை எடுத்துக்காட்டவும், அவர்களுக்கு மறுமணம் செய்யவேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்தவும் எழுதப்பட்டதாகும்.

எட்டாவது அத்தியாயமாகிய ‘சொத்துரிமை’ என்னும் தலைப்புக் கொண்ட அத்தியாயமானது பெண்களுக்குச் சுதந்திரம் ஏற்படவேண்டுமானால், அவர்கள் ஆண்களுடைய அடிமைகள் அல்லவென்றும், ஆண்களைப்போலவே வாழ்க்கையில் சகல துறைகளிலும் சம அந்தஸ்துடையவர்கள் என்று சொல்லப்பட வேண்டியவர்களானால், உலகச் செல்வங்களுக்கும், போக போக்கியங்களுக்கும் ஆண்களைப்போலவே பெண்களும் உடைமையாளராக வேண்டும் என்பதை வலியுறுத்தவும், பெற்றோர்களுடைய சொத்துகளுக்குப் பெண்களும் ஆண்களைப் போலவே பங்குபெற உரிமையுடையவர்கள் ஆகவேண்டும் என்பதை வலியுறுத்தவும் எழுதப்பட்டதாகும்.

ஒன்பதாவது, பத்தாவது அத்தியாயங்களாகிய ‘கர்ப்பத்தடை’ ‘பெண்கள் விடுதலைக்கு ஆண்மை அழியவேண்டும்’ என்கிற தலைப்புகளை முறையே கொண்ட அத்தியாயங்களானவை கர்ப்பத்தினாலும், பிள்ளைகளைப் பெறுவதனாலும் பெண்களுக்கு ஏற்படும் கஷ்டங்களையும், அடிமைத்தனங்களையும் எடுத்துக்காட்டவும், மற்றும் பிள்ளைகளை அதிகமாகப் பெறுவதனால் ஆண் - பெண் இவர்களுக்குள்ள கஷ்டங்களையும் எடுத்துக்காட்டுவதுடன், பெண்கள் நலத்துக்கு ஆண்களால் - ஆண்கள் முயற்சியால் ஒரு நாளும் நன்மை ஏற்பட்டுவிடாது என்றும், பெண்கள் தங்களை ஆண்களுக்கு அடிமையாக இருக்கவே கடவுள் படைத்தார் என்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் எண்ணத்தை அடியோடு விட்டுவிட்டு, தாங்களும் ஆண்களுக்குச் சமமானவர்கள் என்றும், எவ்விதத்திலும் தாழ்ந்தவர்கள் அல்ல என்றும் கருதிக்கொண்டு தங்களுக்குத் தாங்களே பாடுபடவேண்டும் என்பதை வலியுறுத்தவே எழுதப்பட்டவையாகும்.

ஆகவே, இந்தப் புத்தகத்தில் கண்ட மேற்படி பத்து அத்தியாயங்களும் பெண்கள் எந்தெந்தக் காரணங்களால் அடிமைப்படுத்தப்பட்டார்கள் - அடிமையானார்கள் - அடிமைகளாக இருந்து வருகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டி, எந்தக் காரண காரியங்களால் அவர்கள் (பெண்கள்) அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டுச் சுதந்திர மக்களாக வாழமுடியும் என்பதை எடுத்துக்காட்டவுமான கருத்தை முக்கியமாகக் கொண்டு எழுதப்பட்டவையாகும்.

அன்றியும், இப்புத்தகக் கருத்துகள் இன்றைய நிலையில், எந்த மதத்திற்கும், எந்தத் தேச மக்களுக்கும், எந்த சமூகத்தாருக்கும் பயன்பட்டாகவேண்டும் என்பதே நமது கருத்தாகும். ஆதலால், இப்புத்தகத்தைப் பெண் மக்கள் மாத்திரம் அல்லாமல், பெண்களிடம் ஜீவகாருண்யமும், சமத்துவ உணர்ச்சியும் கொண்ட எல்லா ஆண் மக்களும் வாங்கிப் படித்துப் பார்த்துத் திருந்தவேண்டியது அவசியம் என்றே கருதுகிறோம்.

ஈரோடு
– ஈ.வெ.ராமசாமி
1-1-1942

 

புத்தகத்தை இங்கே வாங்கலாம்


முதல் அத்தியாயம்