வால்காவிலிருந்து கங்கை வரை - வாசகர்களுக்கு

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/volgavilirunthu-gangai-varai-tamil-puththakaalayam
வாசகர்களுக்கு

பேராசிரியர் ராகுல சாங்கிருத்தியாயன் தமிழ் உலகத்திற்குப் புதியவரல்ல. அவருடைய "பொது உடைமை தான் என்ன?” என்ற நூலைப் படித்தவர்கள் ஒவ்வொருவரும், அந்த அறிவுக் கடலின் சிறு பகுதியையேனும் பார்த்திருப்பார்கள். பிள்ளைப் பருவத்திலேயே அறிவுத் தாகமெடுத்த ராகுல்ஜி அறிவைச் சேகரிப்பதற்காக உலகத்தின் மூலை முடுக்குகளையெல்லாம் சுற்றியிருக்கிறார். ஐக்கிய மாகாணத்தின் ஆஜம்கட் ஜில்லாவைச் சேர்ந்த ஒரு சிறு கிராமத்திலே பிறந்த அவர், காசி நகரிலே தொடங்கிய தமது அறிவு சேகரிக்கும் முயற்சியை லெனின் கிராடு சர்வகலாசாலைப் பேராசிரியர் பதவியைப் பெற்ற பிறகுங்கூடத் தொடர்ந்து செய்து வந்திருக்கிறார். ஆயுள் முழுவதும் உழைத்துச் சேகரித்த அறிவுப் பொக்கிஷத்தை அவருடைய நூல்களிலே அள்ளித் தந்திருக்கிறார்.

சமுதாயத்தின் தோற்றம், வளர்ச்சி, நாகரிகம் முதலியவைகளைப் பற்றித் தத்துவ ரீதியாக, "மனித சமுதாயம்" என்ற ஒரு பெரிய நூலை எழுதி இருக்கிறார். அவரே கூறியிருப்பதுபோல், அந்த முக்கியப் பிரச்னைகளைச் சாதாரண ஜனங்களும் புரிந்து கொள்வதற்காக இந்த "வால்காவிலிருந்து கங்கை வரை"யை எழுதியிருக்கிறார். இது அவருடைய சிறந்த சிருஷ்டிகளுள் ஒன்று.

இதிலுள்ள 20 கதைகளுள், ஒவ்வொன்றும் மனித சமுதாய வளர்ச்சியின் ஒவ்வொரு படிகள். தனி மனிதனையோ தனிச் சம்பவத்தையோ மையமாகக் கொள்ளாமல், சமுதாயத்தின் முக்கியமான மாற்றம் அல்லது பெரிய வளர்ச்சிகளையே மையமாகக் கொண்டு, கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. சில கதைகள் அந்த வளர்ச்சி

மாற்றத்தின் போக்கைப் பொறுத்து இரண்டு மூன்று நாமுறைகளைத் தம்முள் அடக்கிக் கொண்டிருக்கின்றன, சில கதைகள், ஒரு தலைமுறையைக் கூடப் பூராவாகத் தம்முள் அடக்கவில்லை. ஒவ்வொரு கதையிலும், அந்தந்தக் காலத்துப் பழக்க வழக்கங்கள், சூழ் நிலைகள் அப்படியே எடுத்துக் காட்டப்பட்டிருக் இன்றன.

இவைகள் வெறும் கதைகளல்ல. சமுதாய வளர்ச்சி யையும் சரித்திரத்தையும், காலங்களையும் நிர்ணயித்துக் கதை உருவத்திலே எழுதப்பட்டிருப்பதால், கதைப் போக்கிற்கு அவசியமில்லாத விஷயங்கள் ஒவ்வொரு கதையின் மத்தியிலும் இடம் பெற்றிருப்பதாகத் தோன்ற லாம். சில இடங்களைப் படிக்கும் பொழுது, சரித்திர ஏடுகளைப் படிப்பதைப் போன்ற உணர்ச்சி கூட ஏற்படலாம். ஆனால், சரித்திரத்தையும் மனித சமுதாய வளர்ச்சியையும் தெரிந்து கொள்வதற்கு அவைகள் இன்றி யமையாதவை. சரித்திரத்தைப் படிப்பதால் ஏற்படும் சலிப்பும், தத்துவத்தைக் கற்பதால் ஏற்படும் சிரமமும் தோன்றாதபடி, கதை உருவிலே இந்த அம்சங்களை அற்புதமாகப் பின்னித் தந்திருக்கிறார் ராகுல்ஜி. இது சர்பத் அல்ல; மருந்துதான். ஆனால், மருந்தின் கசப்போ கைப்போ தெரியாதபடி சர்பத்தாக ஆக்கப்பட்டிருக்கிறது.

இது இந்தச் சிறந்த நூலைத் தமிழிலே செய்ய வேண்டு மென்று நாள்தோறும் வளர்ந்து வந்த ஆசையே, துணிவாக இந்நூலை மொழி பெயர்க்கும் வேலையில் என்னை ஈடுபடும்படிச் செய்தது.

முடிந்தவரை சாதாரணத் தமிழ் மக்களும் புரிந்து கொள்ளும்படி எழுத முயற்சி செய்திருக்கிறேன். ஆனால், விஷயத்தின் கெளரவமும் ராகுல்ஜியின் அளவற்ற அறிவுச் செல்வத்தை ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்குக் கொண்டு வருவதில் உள்ள சிரமமும் சேர்ந்து, நடையை இன்னும் எளிதாக ஆக்க முடியாமற் செய்து விட்டன.

இந்நூலை மொழி பெயர்த்து எழுதத் தொடங் கியது முதல், ஒப்பு நோக்கிப் பிழை திருத்தி அச்சிட்டுப் புத்தக உருவில் வெளிவரும் வரை, எனது நண்பர் திரு. ராம் ஷண்முகம் அவர்கள் பூரணப் பொறுப்பெடுத்து ஒத்துழைத்தார். அவருக்கு என் உளம் நிறைந்த நன்றி.

கண. முத்தையா
1.8.1949
சென்னை

Back to blog